'இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு நானும் காரணம்' - பகிரங்கமாக ஒப்புக் கொண்ட கோத்தபய ராஜபக்சே

'இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு நானும் காரணம்' - பகிரங்கமாக ஒப்புக் கொண்ட கோத்தபய ராஜபக்சே
Updated on
2 min read

கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு நானும் ஒரு காரணம்தான் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ள கோத்தபய ராஜபக்சே அதை தானே சரி செய்வேன் என்றும் உறுதியளித்துள்ளார். இலங்கையில் மக்கள் போராட்டம் வலுத்துவரும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 17 பேர் புதிய அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்தப் பதவியேற்புக்குப் பின்னர் பேசிய கோத்தபய ராஜபக்சே, "கடந்த இரண்டாண்டுகளில் நிறைய இன்னல்களை எதிர்கொண்டுள்ளோம். ஒருபுறம் கரோனா பெருந்தொற்று, இன்னொருபுறம் கடன் சுமை. அந்த சுமைக்கான காரணங்களில் எனக்கும் பொறுப்பிருக்கிறது. அவற்றை சரி செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதை சரி செய்து முன்னேறிச் செல்ல வேண்டும். மக்களின் நன்மதிப்பை, நம்பிக்கையைப் பெற வேண்டும்.

இலங்கையை நிதி நெருக்கடி சூழத் தொடங்கியவுடனேயே நான் சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது தவறு. மேலும், ரசாயன உரங்களுக்கு தடை விதித்து இலங்கையில் விவசாயத்தை முழுவதுமாக இயற்கை உரம் சார்ந்ததாக மாற்றியிருக்கக் கூடாது. இன்று பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். நான் இந்த நிலைக்காக வருந்துகிறேன்.

நான் செய்த சில தவறுகளால் இன்று தேசம் வரலாற்றில் கண்டிராத பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்டுள்ளது. அதை சரி செய்வேன்" என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து ரசாயன உரங்கள் இறக்குமதி செய்ய தடை விதித்ததற்கு இலங்கை அந்நியச் செலவாணி சுமையைக் காரணமாகக் கூறினாலும் கூட, அது விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்துவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்தியா நிதியுதவி: இதனிடையே, இலங்கைக்கு 190 கோடி டாலர் நிதியுதவியை இந்தியா வழங்கி உள்ளது. இந்த உதவியை டீசல், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களாக வழங்கியது. குறிப்பாக 2.7 லட்சம் டன் டீசல், பெட்ரோல் மற்றும் 40 ஆயிரம் டன் அரிசியை வழங்கி உள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க மேலும் கடனுதவி வழங்குமாறு இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, இலங்கைக்கு 200 கோடி டாலர் வழங்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.

நிதி நெருக்கடியை சமாளிக்க, 5 ஆயிரம் கோடி டாலர் வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்துவதை தற்காலிகமாக ஒத்தி வைத்திருப்பதாக இலங்கை அரசு கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in