Published : 18 Apr 2022 10:30 AM
Last Updated : 18 Apr 2022 10:30 AM

உக்ரைன் - ரஷ்ய போர் காரணமாக உலகில் 5-ல் ஒருவர் வறுமைக்கு தள்ளப்படலாம்: ஐ.நா.

ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரேஸ்

ஜெனீவா: உக்ரைன் மீதான் ரஷ்ய போர் காரணமாக உலகில் 5-ல் ஒருவர் வறுமைக்கு தள்ளப்படலாம் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. அதாவது 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழலுக்கு தள்ளப்படுவார்கள். இது அண்மைக் காலங்களில் ஏற்படாத புதியதொரு சூழல் என்று எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்ரேஸ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "உக்ரைனில் நடக்கும் துயரங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உக்ரைன் எல்லைகளைத் தாண்டியும் இந்தப் போர், வளர்ந்த நாடுகள் மீது சத்தமில்லாமல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் தாக்குதலில் உலகின் 5-ல் ஒருவர், அதாவது 1.7 பில்லியன் மக்கள் வறுமை, பசி, பட்டினி போன்ற சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். இது அண்மையில் ஏற்படாத ஒரு சூழல். உக்ரைன் மற்றும் ரஷ்யாவும் உலகில் கோதுமை உற்பத்தியில் 30% பங்கு கொண்டுள்ளது. அதேபோல் பார்லியும் உக்ரைன், ரஷ்யாவில் தான் அதிகமாக உற்பத்தியாகிறது. மக்காச்சோள உற்பத்தியில் உக்ரைன் உலகளவில் 5-வது இடத்தில் உள்ளது. சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் பாதிக்கும் மேல் உக்ரைனில் தான் உருவாகிறது. வளர்ச்சி குன்றிய நாடுகளில் 45 நாடுகள் ரஷ்யா, உக்ரைன் கோதுமையையே நம்பியுள்ளன. இந்நிலையில் இந்தப் போர் நீடித்தால் உலகில் 5ல் ஒருவர் வறுமைக்கு தள்ளப்படலாம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்டலினா ஜார்ஜீவா, "இந்தப் போரால் உலகளவில் 143 நாடுகளின் பொருளாதார நிலவரத்தில் தாக்கம் ஏற்படும். இந்த நாடுகள் தான் சர்வதேச ஜிடிபியில் 86% ஆதிக்கம் செலுத்துவதால் அவர்களின் பொருளாதார குறியீடுகள் சரிவது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.

அழுத்தம் தரும் ரஷ்யா; அடிபணியாத உக்ரைன்... இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா 53 நாட்களைக் கடந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைன் பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள, ரஷ்ய படைகள் அங்கு துறைமுக பகுதியான மரியுபோல் நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில்,‘‘மரியுபோல் நகரில் உள்ள உக்ரைன் வீரர்கள், ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தால், அவர்களின் உயிர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். சரணடைய மறுத்து தொடர்ந்து சண்டையிட்டால், முற்றிலும் அழித்துவிடுவோம்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், உக்ரைன் வீரர்கள் சரணடைய அந்நாட்டு ராணுவம் தடை விதித்திருப்பதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகார் கோனாஷென்கோ கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x