

ரஷ்யா உடனான இந்திய உறவு குறித்தும், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை இந்தியா அணுகும் விதம் குறித்தும் விவரித்துள்ளார், இந்தியானா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் சுமித் கங்குலி. குறிப்பாக, உக்ரைன் யுத்தத்தை முன்வைத்த சர்வதேச அரசியலில், இந்திய - ரஷ்ய உறவை மேற்குலக நாடுகளால் தகர்க்க முடியாததன் காரணத்தையும் தெளிவுபடுத்தும் அவரது 'கான்வர்சேஷன்' தள கட்டுரையின் தமிழ் வடிவம் இது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளைக் கண்டித்து, அந்நாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க உலகின் பெரும்பாலான நாடுகள் அணிவகுத்து நிற்கையில், உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா மட்டும் ரஷ்யா குறித்து குறைவாகவே விமர்சித்து வந்தது. தற்போதைய நெருக்கடி முழுவதிலும் ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுப்பதை இந்தியா கவனமாக தவிர்த்து வருகிறது. ரஷ்யா குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட எல்லா தீர்மானங்களையும் இந்தியா புறக்கணித்துள்ளது. அந்நாட்டுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளில் சர்வதேச சமூகத்துடன் இணையவும் மறுத்து விட்டது. உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டபோதும் கூட, பாரபட்சமற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்து எந்த தரப்பின் மீதும் இந்தியா குற்றம்சாட்டவில்லை.
இந்தியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளின் ஆய்வாளனாக, உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை புரிந்துகொள்வது சிக்கலானது என்பதை நான் அறிவேன். பெரும்பாலான இடங்களில் இந்தியா தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான முடிவு, அதன் ராஜாங்க விவகாரம், ராணுவம் மற்றும் எரிசக்தி தொடர்பான பல பிரச்சினைகளுக்கு ரஷ்யாவை இந்தியா சார்ந்திருப்பதில் இருந்து உருவாகிறது.
ரஷ்யா ஒரு போர் அரசியல் வியூக கூட்டாளி: இந்தியாவின் இந்த நிலைப்பாடு முற்றிலும் புதியது ஒன்றும் இல்லை. ஓர் அணிசேரா நாடு என்ற அந்தஸ்தின் அடிப்படையில், உலக அளவிலான பல பிரச்சினைகளில் உறுதியான நிலைப்பாட்டை மேற்கொள்வதை நீண்ட காலமாகவே இந்தியா தவிர்த்து வருகிறது. எந்த அதிகாரக் கூட்டத்துடனும் முறையாக சேராத பல நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
ஒரு போர் அரசியல் வியூக நிலைப்பாட்டில் நின்று ரஷ்யாவை அந்நியப்படுத்திவிட முடியாது என்று இந்தியா நம்புகிறது. ஏனெனில், காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதி பிரச்சினையில், ஐக்கிய நாடுகள் சபையின் எந்த ஒரு பாதகமான தீர்மானத்தையும், வீட்டோ அதிகாரம் மூலம் ரத்து செய்ய ரஷ்யாவை இந்தியா நம்பியுள்ளது. 1947-ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிந்ததில் இருந்து, இரண்டு நாடுகளும் காஷ்மீர் தொடர்பாக மூன்று போர்களில் ஈடுபட்டுள்ளன. மேலும், காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
சோவியத் யூனியன் நாட்களை நாம் பின்னோக்கிப் பார்த்தாலும், காஷ்மீர் மீதான எந்தவொரு பாதகமான அறிக்கையில் இருந்தும் இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவின் வீட்டோ அதிகாரத்தையே நம்பியிருக்கிறது. உதாரணமாக, வங்கதேசம் உருவாக காரணமாக இருந்த, 1971-ல் உருவான கிழக்கு பாகிஸ்தான் நெருக்கடியின்போது, சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து துருப்புகளை திரும்ப பெறக் கோரும் தீர்மானத்தில் ஐ.நா.வின் கண்டனத்தில் இருந்து இந்தியாவை சோவியத் யூனியன் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திக் காப்பாற்றியது.
மொத்தத்தில் சோவியத் யூனியன் மற்றும் ரஷ்யாவும் இந்தியாவைப் பாதுகாக்க 6 முறை தங்களின் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளன. பனிப்போர் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், வீட்டோ அதிகாரத்திற்காக ரஷ்யாவை இந்தியா நம்பியிருக்க வேண்டியது இல்லை. என்றாலும் அவ்வபோது நடந்து வரும் சண்டைகளால் காஷ்மீர் மீதான பதற்றம் இன்னும் தொடர்ந்து வருவதால், இந்த விவகாரம் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் முன்புவந்தால், ரஷ்யா மீண்டும் தன் பக்கம் நிற்கவேண்டும் என இந்தியா விரும்புகிறது. ரஷ்யாவுடனான இந்தியாவின் நெருங்கிய உறவு என்பது பனிப்போர் காலக்கட்டத்தில் நிலவிய விசுவாசத்தில் இருந்து தொடங்குகிறது. இந்திய துணைக்கண்டத்திற்கு அருகில் இருக்கும் எதிரி நாடான பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் போர் அரசியல் வியூக நெருக்கத்திற்கு எதிராக சோவியத் பக்கம் இந்தியா நகர்ந்தது.
சீனக் குடியரசுடனான நீண்ட கால எல்லைப் பிரச்சினையில், ரஷ்யா தனக்கு ஆதரவாக இருக்கும் அல்லது குறைந்தபட்சம் நடுநிலையாகவாவது இருக்கும் என்று இந்தியா நம்புகிறது. இந்தியாவும் சீனாவும் 2,000 மைல்கள் (சுமார் 3,500 கி.மீ.) எல்லையை தங்களுக்குள் பகிந்து கொள்கின்றன. கடந்த 80 ஆண்டுகளாக இந்த இடத்திற்கான போட்டி நிலவிவருகிறது. இதற்காக 1962-ல் நடந்த போரினாலும் இந்த விவகாரம் தீர்வை எட்டவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக, இமயமலையில் மேலும் மோதல்கள் ஏற்பட்டால் சீனாவின் பக்கம் ரஷ்யா இருப்பதை இந்தியா விரும்பவில்லை. 2020-ம் ஆண்டு முதல் எல்லைத் தகராறும் மீண்டும் தொடங்கி உள்ளது. இந்திய ராணுவத்திற்கும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்திற்கும் தொடர்ந்து மோதல்கள் நடந்து வருகின்றன.
ஆயுதங்கள் வழங்கும் ரஷ்யா: இந்தியாவும் தனது பலவிதமான ஆயுதத் தேவைக்காக ரஷ்யாவையே சார்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் ஆயுதக் களஞ்சியத்தில் இருக்கும் 60-70 சதவீத ஆயுதங்கள் சோவியத் மற்றும் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்டவையாகவே இருக்கும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா ஆயுதங்கள் வாங்குவதை குறிப்பிடத்தக்க அளவில் பன்முகப்படுத்த முயன்றது. அதற்காக அந்த 10 ஆண்டுகளில், 20 பில்லியன் டாலருக்கு ராணுவ உபகரணங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கியுள்ளது. இருந்தபோதிலும் ஆயுத விற்பனையைப் பொறுத்தவரை ரஷ்யாவை விட்டு வெளியே வர முடியாத நிலையிலேயே இந்தியா இருக்கிறது.
விஷயங்களை ஒருங்கிணைக்க இந்தியாவும் ரஷ்யாவும் தங்களுக்குள் நெருங்கிய ராணுவ உற்பத்தி உறவுகளை உருவாக்கியுள்ளன. ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இரு நாடுகளும் இணைந்து கப்பல், விமானம் அல்லது நிலத்தில் இருந்து ஏவக்கூடிய பன்முகத்தன்மைக் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணைகளைத் தயாரித்துள்ளன. இந்தியா சமீபத்தில் தனது முதல் ஏவுகணை ஏற்றுமதிக்கான ஆர்டரை பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து பெற்றிருக்கிறது. இதனால் ரஷ்யாவுடனான இந்தப் பாதுகாப்பு இணைப்பில் கனிசமான நிதி மற்றும் செலவு மட்டுமே துண்டிக்கப்படும். அமெரிக்கா, மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல் இல்லாமல் ரஷ்யா தனது சில வகை ராணுவத் தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை. உதாரணமாக ரஷ்யா தனது அகுலா ரக அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இந்தியாவிற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது. தங்களது தொழில்நுட்பம் ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்ற கவலையின் காரணமாக வேறு எந்த நாடும் இந்தியாவிற்கு இணையான ஆயுதங்களை வழங்கத் தயாராக இல்லை.
எந்த ஒரு மேற்கத்திய நாடுகளை விட உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை கணிசமான விலையில் இந்தியாவிற்கு ரஷ்யாவால் வழங்க முடியும். இதனால் அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவின் S-400 ஏவுகணை பாதுகாப்பு பேட்டரியை இந்தியா வங்குவதில் ஆச்சரியம் இல்லை.
ஆற்றல் சார்ந்தது: இந்தியாவின் பாதுகாப்பு துறை மட்டும் இல்லை, அதனுடைய எரிசக்தி துறையும் ரஷ்யாவிடமிருந்து பிரிக்க முடியாத அளவில் பிணைக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் எல்லைக்கு வெளிய அணு ஆயுதங்களை சோதிப்பதற்காகப் இந்தியா பெற்றிருந்த அணு ஆயுதப் பரியா (nuclear pariah) அந்தஸ்தை புஷ் நிர்வாகம் முடிவுக்கு கொண்டு வந்ததிலிருந்து இந்தியா ஓர் அணுமின் சக்தி திட்டத்தை உருவாக்கியுள்ளது. மொத்த ஆற்றல் உற்பத்தியின் அடிப்படையில் இந்த துறை சிறியதாக இருந்தாலும், அது வளர்ந்து வருகிறது. ரஷ்யா அதில் முக்கிய பங்காளியாக உருவெடுத்துள்ளது. 2008-ம் ஆண்டின் அமெரிக்கா இந்தியா அணு மின்சக்தி ஒப்பந்தத்தின் படி, சாதாரண அணுசக்தி வர்த்தகத்தில் இந்தியா ஈடுபட அனுமதித்த பின்னர், ரஷ்யா 6 அணு உலைகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் விரைவாக கையெழுத்திட்டது.
ஆலை அல்லது அதன் கூறுகளில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு உற்பத்தியாளர் பொறுப்பேற்ற வேண்டும் என்ற அணுசக்தி பொறுப்புச் சட்டத்தின் கட்டுப்பாடுகள் காரணமாக அமெரிக்கா மற்றும் எந்த மேற்கத்திய நாடுகளும் இந்தியாவின் அணுமின் சக்திதுறையில் முதலீடு செய்ய தயாராக இல்லை. ஆனால், அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்குண்டான பொறுப்பை ஏற்பதாக ரஷ்யா கூறியிருப்பதால், இந்தியாவின் அணுசக்தி துறையில் நுழைய முடிந்தது. இருப்பினும், மேற்கத்திய அரசாங்கங்கள் தங்கள் வணிக நிறுவனங்களுக்கு அத்தகைய உத்தரவாதங்களை வழங்க விரும்பவில்லை.
அணுசக்தி துறையிலிருந்து விலகி ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. உதாரணமாக, இந்திய அரசு நடத்தி வரும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆணையம், பசிபிக் பெருங்கடலில் உள்ள ரஷ்ய தீவான சகலின் இருந்து புதைபடிவ எரிபொருட்களை பிரித்தெடுப்பதில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் வெளி்நாட்டில் இருந்தே இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவில் இருந்து சிறிதளவே இறக்குமதி செய்தாலும் அதனை நிறுத்திக்கொள்ள இந்தியா தயாராக இல்லை .
சமீபத்தில், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், "ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவு பல தசாப்தங்களாக அமெரிக்கா இந்தியாவுடன் ஒரு பங்காளியாக இருக்க முடியாத நேரத்தில் வளர்ந்துள்ளது" என்று குறிப்பிட்டார். மேலும் அமெரிக்கா தற்போது இந்தியாவின் பங்காளியாக இருக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் ராஜாங்கம், ராணுவம் மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியா எந்த நேரத்திலும் ரஷ்யா மீதான அதன் சமநிலை செயலில் இருந்து விலகுவது கடினமே.
*
- இந்தியானா பல்கலைகழகத்தின் புகழ்பெற்ற அரசியல் அறிவியல் பேராசிரியர் மற்றும் இந்திய கலாசாரங்கள் மற்றும் நாகரிகங்களில் தாகூர் இருக்கையின் தலைவர் சுமித் கங்குலி எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம்.
தகவல் உறுதுணை: தி கான்வர்சேஷன்