

வடகொரிய அதிபர் கிம் தனது அதிரடி நடவடிக்கைகளால் தன் மீதான வெளிச்சத்தை என்றும் அகலவிடாமல் வைத்திருப்பவர். அந்த வகையில் சமீபத்தில் கிம் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
வடகொரியாவின் சர்வாதிகாரியாகவே கிம்மை பற்றி மேலை நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடும். எனினும் இவை எல்லாம் பொய் என்று கூறும்வகையில் அவ்வப்போது தனது இன்னொரு முகத்தையும் கிம் வெளிகாட்டி விடுவார். அந்த வகையில் தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. வடகொரியாவின் புகழ்பெற்ற செய்தி வாசிப்பாளர் ரி சுன் ஹி-யின் பத்திரிகை சேவையை பாராட்டி, கிம் தலைநகரில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை ரி சுன் ஹியிக்கு வழங்கி இருக்கிறார்.
1994 ஆம் ஆண்டு கிம் தந்தை, இல் சுங்கின் மரணம் முதல் 2006 முதல் அணு ஆயுத சோதனை வரை, சுமார் 50 ஆண்டுகள் வட கொரியாவின் மிக முக்கியமான நிகழ்வுகள் செய்திகளாக வழங்கி புகழ்பெற்றவர் ரி சுன் ஹி. அவருக்கு 70 வயதாகிறது. இந்த நிலையில் கிம் அளித்த பரிசு ரி சுன் ஹியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ அதிபர் கிம் அளித்த வீடு ஓட்டல் போன்று உள்ளது. இரவு முழுவதும் இந்த பரிசை நினைத்து நானும் எனது குடும்பத்தாரும் நன்றியுடன் கண்ணீர் வடித்தோம்” என்று தெரிவித்தார்.
அணுஆயுத சோதனை: 2022 ஆம் ஆண்டு முதல், கிம் ஏவுகணை சோதனைகளை எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடத்தி வருகிறார். இதுவரை 9 க்கும் அதிகமான ஏவுகணை சோதனைகளை கிம் நடத்தி இருக்கிறார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்த இருப்பதாக தென் கொரியாவும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளன.