சீனாவின் முட்டுக்கட்டையால் தீவிரவாதி மசூத் அசார் மீது தடை விதிக்கும் முடிவை நிறுத்தியது ஐ.நா.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த 2001-ம் ஆண்டே ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு உலகளாவிய தடை விதித்தது. ஆனால் அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் மீது தடை விதிக்கும் முடிவை நிறுத்தி வைத்திருப்பது புரியாத புதிராக உள்ளது. தவிர மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் கடந்த ஜனவரி 2-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய உடனேயே, அந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் மீது தடை விதிக்கக் கோரி ஐ.நா.வுக்கு இந்தியா கடிதம் அனுப்பி இருந்தது. மேலும் தாக்குதல் தொடர்பான வலுவான ஆதாரங்களையும் இணைத்திருந்தது.
இந்தியா அளித்திருந்த அந்த ஆதாரங்களில் உள்ள தொழில்நுட்ப சாதகங்களை ஆராய்ந்த ஐ.நா. குழு இது பற்றி உறுப்பு நாடுகளின் கருத்துகளை கேட்டிருந்தது. தடை விதிப்பது குறித்து எந்த நாடும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதையடுத்து, அவர் மீது தடை விதிக்க ஐ.நா ஆயத்தமானது.
இந்த சூழலில் வெள்ளிக்கிழமை அன்று கெடு முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, இந்த விவகாரத்தை நிறுத்தி வைக்கும்படி ஐ.நா குழுவிடம் வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா கேட்டுக் கொண்டது. இதையடுத்து மசூத் அசார் மீதான தடையை ஐ.நா நிறுத்தி வைத்துள்ளது.
ஏற்கெனவே மும்பை தாக்குதல் தொடர்பாக லக்விக்கு தடை விதிக்கும்படி இந்தியா கோரியபோதும் பாகிஸ்தான் சார்பில் சீனா முட்டுக்கட்டை போட்டிருந்தது. தற்போது இந்த முறையும் சீனா முட்டுக்கட்டை போட்டிருப்பது இந்தியாவை கடும் அதிருப்தி அடைய வைத்துள் ளது.
இது குறித்து வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் வெளி யுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் கூறியதாவது:
தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஐ.நா. ஒருதலைபட்சமான தேர்ந்தெடுக்கப்படும் முறையை கையாள்கிறது. இத்தகைய நடவடிக்கை இந்தியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்படுத்திய தீவிரவாத தடை கமிட்டி ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் மீது தடை விதிக்க வேண்டும் என இந்தியாவின் கோரிக்கையை தொழில்நுட்ப வேறுபாடுகளை காரணம் காட்டி நிறுத்தி வைத்திருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு அல்-கொய்தாவுடன் தொடர்பு வைத்திருந்ததை சுட்டிக்காட்டி கடந்த 2001-ம் ஆண்டிலேயே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதனை தடை செய்தது. ஆனால் அந்த அமைப்பின் தலைவர் மீது மட்டும் தடை விதிக்க தயங்குவது புரியாத புதிராக உள்ளது.
ஐ.நாவின் இந்த தயக்கத்தால் இந்தியாவில் பதான்கோட் போன்ற தீவிரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்தியா தான் அதன் ஆபத்துகளை சந்திக்க நேரிடுகிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு உலகளாவிய தொடர்பை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு கொடுத்தால் ஒட்டுமொத்த சர்வதேச சமுதாயமும் பாதிப்புக்குள்ளாக நேரும்.
ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு தலைவர் மசூத் அசார் போன்றவர்களிடம் இருந்து உறுப்பு நாடுகளை காப்பாற்ற வேண்டிய கடமை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலுக்கு இருக்கிறது. எனவே அதற்கேற்றபடி தான் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தீவிரவாத தலைவர் மசூத் அசாருக்கு தடை விதிக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்காவின் வாஷிங்டனில் கடந்த வியாழன் அன்று நடந்த அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் தீவிரவாதத்தை வேரறுக்க உலக நாடுகள் முன் வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மசூத் அசார் தீவிரவாதி அல்ல: சொல்கிறது சீனா
ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசாருக்கு தடை விதிக்கும் முடிவுக்கு முட்டைக்கட்டை போட்டப் பின் செய்தியாளர்களை சந்தித்த சீனாவின் நிரந்தர பிரதிநிதி லீ ஜையி கூறியதாவது:
ஐ.நா. தடை விதிக்கும் அளவுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார் ஒன்றும் தீவிரவாதி அல்ல. எனவே தான் இந்த முடிவை நிறுத்தி வைக்கும்படி தெரிவித்தோம். மேலும் தடைக்கு தேவையான சில அம்சங்கள் அசாருக்கு எதிராக இல்லை. மேலும் அவரை தீவிரவாதியாக கருத முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி ஜக்கி உர் ரெஹ்மான் லக்விக்கு எதிராக தீவிரவாத தடுப்பு தீர்மானம் கொண்டு வரக் கோரி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானுக்கு உதவும் வகையில் சீனா அந்த தீர்மானத்துக்கும் முட்டுக்கட்டை போட்டது. தற்போது 2வது முறையாக மசூத் விவகாரத்திலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது.
