Published : 13 Apr 2022 09:12 AM
Last Updated : 13 Apr 2022 09:12 AM

'இன அழிப்பில் ஈடுபட்டுள்ளார் புதின்' - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

புதினை போர்க் குற்றவாளி என்று பகிரங்கமாக அறிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தற்போது ரஷ்யா இன அழிப்பில் ஈடுப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைனின் மரியுபோல் துறைமுக நகரைக் கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் அன்றாடம் உக்ரைனில் இருந்து அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு, பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளியாகி வருகின்றன. ரஷ்யா பாலியல் பலாத்காரங்களை ஒரு போர் உத்தியாகவே பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவின் அயோவா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் பைடன், "உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்துவது நிச்சயமாக இன அழிப்பு தான். இதை சர்வதேச ஆய்வுகளுக்கு உட்படுத்தி வழக்கறிஞர்கள் மூலமே சட்டபூர்வமாக உறுத்திப்படுத்த வேண்டும். ஆனால் என்னைப் பொருத்தவரை இது இன அழிப்பு என்றே தோன்றுகிறது. உக்ரைனியர்களே இருக்கக் கூடாது என்பது தான் புதினின் எண்ணமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி, "இது ஒரு உண்மையான தலைவரிடமிருந்து வந்துள்ள உண்மையான வார்த்தைகள்" என்று கூறியுள்ளார்.

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதியன்று ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கியது. ஆனால் இதுவரை ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி வளாகங்கள் எனப் பாரபட்சமின்றி ரஷ்யப் படைகள் தகர்த்துள்ளன. முன்னதாக கீவ் நகர் வரை முன்னேறி தாக்குதலை நடத்திய ரஷ்யப் படைகள் தற்போது டான்பாஸில் தனது படைகளைக் குவித்துள்ளது. மரியுபோல் நகரை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியில் அங்குள்ள மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x