புதிய குடியிருப்புகள் அமைக்க இஸ்ரேல் திட்டம்: ஒருங்கிணைந்த பாலஸ்தீன அரசு அதிருப்தி

புதிய குடியிருப்புகள் அமைக்க இஸ்ரேல் திட்டம்: ஒருங்கிணைந்த பாலஸ்தீன அரசு அதிருப்தி
Updated on
1 min read

பாலஸ்தீனத்தின் சர்ச்சைக்குரிய பகுதியில் புதிய குடியேற்றங்களை உருவாக்கப்போவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாலஸ்தீனப் பகுதிகளான மேற்குக்கரை மற்றும் காஸாவில் தனித்தனி ஆட்சி நிர்வாகங்கள் நடைபெற்று வந்த நிலையில், இவை இரண்டையும் இணைத்து ஒருங்கிணைந்த பாலஸ்தீன அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. இதனால், இஸ்ரேல் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு பதிலடியாக புதிய குடியேற்றம் தொடர்பான அறிவிப்பை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

500 வீடுகளைக் கொண்ட யூதர்களின் குடியிருப்பை ஏற்படுத்துவதற்கான டெண்டர் அறிவிப்பை இஸ்ரேல் வீட்டு வசதி அமைச்சர் உரி ஏரியல் வெளியிட்டுள்ளார். இதில், 400 வீடுகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஜெருசலேம் பகுதியிலும், 100 வீடுகள் பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையிலும் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உரி ஏரியல் கூறுகையில், “இந்த குடியேற்ற நடவடிக்கையின் மூலம் பாலஸ்தீனத்தின் பயங்கரவாத அரசுக்கு, இஸ்ரேல் அரசு தகுந்த பதிலடியை அளித்துள்ளது” என்றார்.

பாலஸ்தீன அதிபர் மெஹ்மூத் அப்பாஸின் ஆலோசகர் ஹம்மத் கூறுகையில், “இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம். இரு நாடுகள் கொள்கையில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவிற்கு விருப்பம் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இஸ்ரேல் மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

அதிபர் மெஹ்மூத் அப்பாஸின் செய்தித்தொடர்பாளர் நபில் அபு ருதெய்னா கூறுகையில், “இஸ்ரேலின் இந்நடவடிக்கைக்கு பாலஸ்தீனர்கள் தகுந்த பதிலடி தருவார்கள். ஒருங்கிணைந்த பாலஸ்தீன அரசுக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இஸ்ரேல் புதிய குடியேற்றம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குடியேற்றம் தொடர்பாக அந்நாடு கடைப்பிடித்து வரும் கொள்கையில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்றார்.

பாலஸ்தீனம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு இஸ்ரேலின் குடியேற்ற விரிவாக்க கொள்கை முக்கிய காரணமாக இருப்பதாக அமெரிக்கா ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in