

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செய்தித்தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“மோடியை அமெரிக்காவிற்கு வரவேற்பதற்கு ஆவலுடன் இருக்கிறோம். ஆனால், அவர் எப்போது வருவார் என்பது தொடர்பான அறிவிப்பை இப்போது வெளியிட முடியாது” என்று கூறியுள்ளார். முன்னதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஜெய்சங்கரிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, மோடியை வரவேற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழைப்பை ஏற்று வரும் செப்டம்பர் மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்வார் என்றும், எந்த தேதியில் செல்வார் என்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் இந்திய அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோது, மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த ஒபாமா, அவரை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 30-ம் தேதி ஒபாமா – மோடி சந்திப்புக்கு ஏற்பாடு செய்யலாமா என்று அமெரிக்க அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். ஐ.நா பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க செப்டம்பர் 26-ம் தேதி மோடி அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்.