பாக். துணை சபாநாயகர் பதவி விலகவில்லை - நாடாளுமன்ற செயலகம் தகவல்

பாகிஸ்தான் துணை சபாநாயகர் காசிம் சூரி (கோப்புப்படம்)
பாகிஸ்தான் துணை சபாநாயகர் காசிம் சூரி (கோப்புப்படம்)
Updated on
1 min read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் துணை சபாநாயகர் காசிம் சூரி பதவி விலகவில்லை. திங்கள்கிழமை புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் போது அவர் முக்கிய முடிவெடுப்பார் என அந்நாட்டு நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி, சனிக்கிழமை நடந்த இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் துணை சபாநாயகர் காசிம் சூரி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்று செய்தி பரவியது. இந்த செய்தி உண்மை இல்லை என்று மறுத்துள்ள பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலகம், காசிம் சூரி தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும், திங்கள் கிழமை பாகிஸ்தானின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் முக்கியமான தருணத்தில் அவர் நாடாளுமன்றத்திற்கு தலைமையேற்பார் என்று கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பாக, நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் கைசர் தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக நாாடளுமன்றத்தில், "பாகிஸ்தானை பாதுகாப்பது எனது அரசியலமைப்பு கடமை. சபாநாயகராக இது எனது கடைசிக்கூட்டமாக இருக்கலாம். பாகிஸ்தான் அரசியலமைப்பிற்காக நான் உறுதி எடுத்துக்கொள்கிறேன். நமது இறையான்மைக்காக நாம் நிற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மிரட்டல் கடிதத்தை நாடாளுமன்றத்தில் காட்டிய ஆசாத் கைசர், "யாராவது பார்க்க விரும்பினால் இந்த கடிதம் என்னிடம் உள்ளது" என்று தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சபாநாயகர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவைத் தலைவர் அயாஸ் சாதிக் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வாக்கெடுப்பு நடத்தினார். இதனைத் தொடர்ந்து இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ-இன்சாப் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை இரவு தொடங்கியது. இதில் 174 உறுப்பினர்கள் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in