Published : 10 Apr 2022 06:56 AM
Last Updated : 10 Apr 2022 06:56 AM

'காஷ்மீரி' பூர்விகம், அரசியல் பாரம்பரியம், சிறந்த நிர்வாகி - பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளர் ஷெபாஸ் யார்?

நவாஸ் ஷெரீப் மற்றும் ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற முடியாமல் ஆட்சியை இழந்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான். 342 பேர் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 174 உறுப்பினர்கள் இம்ரான் கானுக்கு எதிரான பதிவாகின. இதன்காரணமாக, பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற பெயருக்கு ஆளாகியுள்ளார் இம்ரான் கான்.

இம்ரான் கான் பதவியிழந்த நிலையில், பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்பதுதான் உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது. அந்தக் கேள்வியாக விடையாக அந்நாட்டு எதிர்க்கட்சிகளால் கைகாட்டப்படுபவர் ஷெபாஸ் ஷெரீப். இதுவரை பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஷெபாஸ் ஷெரீப், இனி அந்நாட்டின் புதிய பிரதமர் ஆகலாம் என்கின்றன. இன்னும் சில மணி நேரங்களில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிடும்.

ஷெபாஸ் ஷெரீப் யார்?

பாகிஸ்தானின் புகழ்மிக்க அரசியல் மற்றும் செல்வ செழிப்புமிக்க வம்சம் என்றால் அது ஷெரீப் வம்சமே. 'காஷ்மீரி' பூர்வீகத்துடன் லாகூரில் ஸ்டீல் பிசினெஸ் மூலம் முன்னேறிய இந்த வம்சத்தின் முதல் தலைமுறை அரசியல் வாரிசு பாகிஸ்தானை மூன்று முறை ஆட்சி செய்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். ஆம், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் தான் இந்த ஷெபாஸ் ஷெரீப்.

ஷெபாஸ், ஆரம்பத்தில் தந்தையை பின்பற்றி ஸ்டீல் பிசினெஸில் கோலோச்ச நினைத்தார். 'பாகிஸ்தானி ஸ்டீல்' என்ற நிறுவனத்தை தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தினார். 1980 வாக்கில் ஷெரீப் குடும்பம் அரசியலில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுவந்தது. நவாஸ் ஷெரீப், 1983ல் பஞ்சாப் மாகாண அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தார்.

தனது சகோதரர் நவாஸை பின்பற்றி அரசியல் உலகுக்குள் காலடி எடுத்து வைத்தார் ஷெபாஸ் ஷெரீப். லாகூரை அடக்கியுள்ள பஞ்சாப் மாகாணத்தின் உறுப்பினராக 1988 தேர்தலில் முதல்முறையாக வெற்றிபெற்ற ஷெபாஸ், சில ஆண்டுகள் பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார்.

1997 பஞ்சாப் மாகாண தேர்தல் தான் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இந்த தேர்தல் வெற்றியால், பஞ்சாப் மாகாணத்தின் 13வது முதல்வராக பதவியேற்றார் ஷெபாஸ். முதல்வர் பதவி, ஷெபாஸின் இன்னொரு முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தியது. அதுதான் நல்ல நிர்வாகம். பாகிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான பஞ்சாப் உள்கட்டமைப்பில் பல மெகா திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்தினார். பாகிஸ்தானின் முதல் நவீன வெகுஜன போக்குவரத்து அமைப்பை தனது சொந்த ஊரான லாகூரில் ஏற்படுத்திய ஷெபாஸ், சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் தொழில்துறை துறைகளில் அதிக கவனம் செலுத்தி வெகுவிரைவாக மக்கள் மத்தியில் தலைவராக உயர்ந்தார்.

ஆனால், அனைத்தும் மூன்று தவிடுபொடியாகியது. 1999ல் பாகிஸ்தானின் தேசிய அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாமல் போக, ராணுவப் புரட்சி ஏற்பட்ட ராணுவ ஆட்சி அமலானது. இதில் ஷெபாஸின் முதல்வர் பதவியும் பறிபோனதுடன் சிறையிலும் அடைப்பட்டார். அடுத்த ஆண்டே சவுதிக்கு நாடுகடத்தப்பட்ட அவர், பல ஆண்டுகள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழையவில்லை. இறுதியாக, 2007ல் மீண்டும் நாடு திரும்பியதும், தனது அரசியல் வாழ்க்கையை மீண்டும் பஞ்சாப் மாகாணத்தில் இருந்தே தொடங்கினார்.

இதன்பின் 2008 மற்றும் 2013ம் ஆண்டுகளில் மீண்டும் பஞ்சாப் மாகாண முதல்வர் ஆனவர், தேசிய அரசியலில் நுழைந்தது 2017ம் ஆண்டு தான். அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப், பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் சிக்கி பிரதமர் பதவியை இழந்ததுடன், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் பதவியையும் இழந்தார். இதனால், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக தேசிய அரசியலில் காலடி எடுத்து வைத்த ஷெபாஸ் ஷெரீப் மீதும் பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. எந்த வழக்கிலும் குற்றவாளியாக என நிரூபிக்கப்படவில்லை.

2018ல் ஆட்சிக்கு வந்த பிறகு ஷெபாஸ் ஷெரீப்பை குறிவைத்து சில நடவடிக்கைகளை எடுத்தார் இம்ரான் கான். 2019ல் ஷெபாஸ் மற்றும் அவரது மகன் ஹம்சா ஆகியோருக்குச் சொந்தமான 23 சொத்துக்களை பணமோசடி குற்றச்சாட்டில் முடக்கினார். இதே வழக்கில் அடுத்த ஆண்டே அவரை கைது செய்தும் அதிரடி காட்டினார் இம்ரான். அன்று தொடங்கியது இம்ரான் - ஷெபாஸ் மோதல். பல மாத சிறைவாசத்துக்கு பின் 2021ல் வெளியே வந்த ஷெபாஸ், அதிலிருந்து எதிர்கட்சிகளுடன் இணைந்து இம்ரான் கானின் 'பழிவாங்கும் அரசியலை' முடிவுக்கு கொண்டு வர பல முயற்சிகளை மேற்கொண்டுவந்தார்.

இதற்காக தீவிரமாக பணியாற்றி வந்தவர், வெளிநாட்டு சதி குற்றச்சாட்டை முன்வைத்து இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை முன்னின்று நடத்தி இப்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இம்ரான் கானுக்கு எதிரான போராட்டத்தின்போதே எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஷெபாஸை தான் அடுத்த பிரதமராக அறிவித்தனர். பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ இதை உறுதிப்படுத்தவும் செய்துள்ளார்.

பாகிஸ்தானின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளைக் கட்டுப்படுத்துவது அந்நாட்டு ராணுவமே. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் ராணுவத்துடன் இணக்கமான உறவை கொண்டிருக்கவில்லை. ஆனால், ஷெபாஸ் ராணுவ ஜெனரல்களுடன் மிக நெருக்கமான உறவை கொண்டுள்ளார். அதேபோல், அமெரிக்காவுக்கு எதிரான மனநிலையும், சீனாவுக்கு ஆதரவான மனநிலையும் கொண்டவர் என்றும் அவரை சுட்டிக்காட்டுகின்றனர். இம்ரான் கான் விவகாரத்தில் கடந்த வாரம் பேசிய ஷெபாஸ், "அமெரிக்காவுடனான நல்லுறவு பாகிஸ்தானுக்கு நல்லது அல்லது கெட்டது" என்று வெளிப்படையாகவே தெரிவித்து இதை உறுதிப்படுத்தவும் செய்தார்.

எது எப்படியோ, பாகிஸ்தானின் 23வது பிரதமராக ஷெபாஸ் வரும் பட்சத்தில் அவர் முன் சவால்களே அதிகம் உள்ளன. பாகிஸ்தானின் பொருளாதாரம், அதிக பணவீக்கம், வீழ்ச்சியடைந்து வரும் அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு மற்றும் வேகமாக சரிந்து வரும் அந்நிய செலாவணி என அவர் முன் சவால்கள் அணிவகுத்து நிற்கின்றன. இப்படியான பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் ஷெரீப் குடும்பம் பாகிஸ்தானில் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரவுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக இருந்தபோது தனது திறமையான நிர்வாகத்தால் கவனம் ஈர்த்தவர் பாகிஸ்தானின் (ஷெரீப் குடும்பத்தின்) புதிய பிரதமராக நாட்டை மீட்டெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x