Published : 08 Apr 2022 09:05 AM
Last Updated : 08 Apr 2022 09:05 AM

புக்கா நகரப் படுகொலை எதிரொலி | ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பு

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒன்றரை மாதங்களாக தாக்குதல் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவை போரை நிறுத்தும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கான அழுத்தம் கொடுக்கும் வகையில் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ளன. எண்ணெய், நிலக்கரி இறக்குமதி செய்யமாட்டோம் என்று ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்தியுள்ளது அமெரிக்கா. இருந்தாலும் கூட ரஷ்யா போரை நிறுத்தவில்லை.இந்நிலையில் தான் உக்ரைனின் புக்கா நகரப் படுகொலை சர்வதேச கவனத்தை ஈர்த்தது. கைகள் கட்டப்பட்டு, நெற்றியிலும், நெஞ்சிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த சடலங்கள் புக்கா நகரில் இருந்து மீட்கப்பட்டன. இதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

உக்கிரமான உரை.. இந்தச் சூழலில் கடந்த 6ஆம் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய பொதுச் செயலாளர் அண்டோனியோ குத்ரேஸ், "உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலால் உலகம் முழுவதும் 74 நாடுகளில் 1.2 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்வு, எரிபொருள், உர விலை உயர்வு ஆகியனவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போர் இப்போதே நிறுத்தப்பட வேண்டும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசினார். வழக்கம் போல் மிலிட்டரி பச்சை நிற டிஷர்ட்டில் தாடியுடன் தோன்றிய ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டின் புச்சா, இர்ஃபின் நகரங்களில் கிடந்த பிணக் குவியல் காட்சிகளை திரையில் காட்டி பேசத் தொடங்கினார். "உக்ரைன் மக்கள் குடியிருப்புகளில், வீடுகளில் கொல்லப்பட்டுள்ளனர். சாலைகளில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய வீரர்கள் பொழுதுபோக்குக்காக எங்கள் மக்களைக் கொன்றுள்ளனர். கழுத்தறுத்து, நெற்றியில் சுட்டு கொலை செய்துள்ளனர். சிலரின் அங்கங்களை துண்டித்துள்ளனர். பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும். இத்தனையையும் செய்வது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடு. அந்த நாடு தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அத்தனை தீர்மானங்களையும் தோற்கடிக்கிறது. இந்நிலையில், ஐ.நா.வுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்களால் உடனடியாக செயல்பட முடியாவிட்டால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலையே கலைத்துவிடுங்கள்" என்று காட்டமாக தனது உரையை முன்வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7ஆம் தேதி மீண்டும் ஐ.நா. பொதுச்சபை கூடியது. அதில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பு நடந்தது. அந்த வாக்கெடுப்பில் 193 உறுப்பு நாடுகளில் 93 நாடுகள் ரஷ்யாவை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து தற்காலிகமாக நீக்கும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்தன. 24 நாடுகள் எதிராக வாக்களித்தன. 58 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

இது முதன்முறை அல்ல.. இதுபோன்று ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இருந்து ஒரு நாடு இடைநீக்கம் செய்யப்படுவது இது முதன்முறை அல்ல. கடந்த 2011 ஆம் ஆண்டு லிபியா இவ்வாறாக வாக்கெடுப்பு மூலம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது. ஆனால், ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடு ஒன்று இடைநீக்கம் செய்யப்படுவது இதுவே முதன்முறை.

உக்ரைன் நன்றி.. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் இந்த நடவடிக்கைக்கு உக்ரைன் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா தனது ட்விட்டர் பக்கத்தில், போர்க்குற்றவாளிகளுக்கு, மனித உரிமைகளைப் பேணும் ஐ.நா. அங்கங்களில் இடம் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா கண்டனம்..இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், "இந்த இடைநீக்கம் எங்களுக்கு வருத்தமளிக்கிறது. ஆனால் இதை எதிர்த்து சட்டபூர்வமாகப் போராடுவோம்" என்றார். வாக்கெடுப்பின் போது பேசிய ரஷ்யப் பிரதிநிதி,எங்களை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேற்றி சில நாடுகள் உலகில் தங்களின் பலத்தை நிருபிக்கச் செய்த அரசியல் நிகழ்வு என்று விமர்சித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x