Published : 07 Apr 2022 10:17 PM
Last Updated : 07 Apr 2022 10:17 PM

’நாடாளுமன்ற கலைப்பு செல்லாது’ - பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் மீண்டும் வாக்கெடுப்பை சந்திக்கிறார் இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்த நாடாளுமன்ற துணை சபாநாயகரின் உத்தரவு செல்லாது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் 28-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டின் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.3) நாடாளுமன்றத்தில் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் கான் சூரி, ’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க நடக்கும் சதி இது’ என்று எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்ட விரோதமானது’ எனக் கூறி நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து இம்ரான் கானின் பரிந்துரையின் பேரில், அந்நாட்டு அதிபர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார்.

இதனால், பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு உருவானது. அதன் காரணமாக இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அட்டா பண்டியல் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு விசாரணை செய்தது. அப்போது, அதிபர் ஆரிப் ஆல்விக்கு பதிலாக ஆஜரான செனட்டர் அலி ஜாஃபரிடம், பிரதமர் மக்கள் பிரதிநிதி இல்லையா என்றும், நாடாளுமன்றம் அரசியல் அமைப்பின் பாதுகாவலர் இல்லையா என்றும் அந்த பெஞ்ச் கேள்வி எழுப்பியது.

நாட்டின் சட்டத்தின்படியே அனைத்தும் நடந்தால் அரசியலமைப்பு நெருக்கடி எப்படி ஏற்படும் என்றும் ஜனாதிபதியின் வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (சிஜேபி) உமர் அட்டா பந்தியல், நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் மற்றும் அவரது குழுவினருக்கு உரிமை உள்ளதா என்ற மனுவின் விசாரணையின்போது, "முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்த துணை சபாநாயகரின் நடவடிக்கை தவறானது. இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கும் செயல் அரசியல் அமைப்பின் 95-வது பிரிவிற்கு எதிரானது” என்று தெரிவித்தார்.

இந்த விசாரணையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 3-ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரித்தையும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையும் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் படி, இம்ரான் கான் வரும் சனிக்கிழமை மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை சந்திக்க இருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x