Published : 07 Apr 2022 06:52 PM
Last Updated : 07 Apr 2022 06:52 PM

பெரு நாட்டில் விலைவாசி உயர்வுக்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்: பின்புலத் தகவல்கள்

லிமா: பெரு நாட்டில் கடந்த சில மாதங்களாகவே விலைவாசி அதிகரித்து வருகிறது. விலைவாசிக்கு உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிராக மக்கள் பல இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெரு தலைநகர் லிமாவில் பெரும் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுநல அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. இதைத் தடுத்திட நினைத்த பெரு அரசு திங்கட்கிழமை லிமா நகரில் ஊரடங்கை அறிவித்தது. இதனை எதிர்த்து பொதுமக்கள் பலர் லிமா நகரில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. பலர் கைது செய்யப்பட்டனர். விவசாயி ஒருவர் போலீஸாரால் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் ஊரடங்கை பெரு அரசு விலக்கிக் கொண்டது. இதுகுறித்து பெரு நாட்டின் பிரதமர் காஸ்டிலோ கூறும்போது, ”இந்தத் தருணத்திலிருந்து ஊரடங்கு உத்தரவை ரத்து செய்யப் போகிறோம். பெரு மக்களை சற்று அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளதால்,பெரு உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெருவில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்கள் வாங்க முடியாத சூழலில், நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளன.

கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்சமாக, பெரு நாட்டில் மார்ச் மாதம் பணவீக்கம் 1.48 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதுவே அங்கு நடக்கும் போராட்டங்களுக்கும் காரணமாகியுள்ளது. மேலும் பெரு பிரதமர் காஸ்டிலோ மீது மக்களிடையே பரவலாக அதிருப்தி நிலவுகிறது.

பெருவின் கிராமப்புற மக்களின் அமோக ஆதரவுடன் காஸ்டிலோ கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தார். எனினும், விலைவாசி உயர்வு காரணமாக காஸ்டிலோவின் புகழ் சரிய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x