Published : 07 Apr 2022 03:06 PM
Last Updated : 07 Apr 2022 03:06 PM

கரோனாவை கையாள்வதில் கோட்டைவிடுகிறதா சீனா? - பொருளாதாரத்தை நசுக்கும் ஷாங்காய் லாக்டவுன்

ஷாங்காய் நகர்

ஷாங்காய்: கரோனாவைக் கட்டுப்படுவதில் 2020-ஆம் ஆண்டு முதலே சீனா பல தவறான அணுகுமுறைகளைக் கையாண்டிருக்கிறது என்ற பரவலான விமர்சனம் நிலவுகிறது. இதற்கு உதாரணமாக, இந்த முறையும் ஷாங்காயில் கரோனாவை கட்டுப்படுத்த சீனா எடுத்த நடவடிக்கைகளால் ஏராளமான சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதைச் சொல்லலாம்.

சீனாவின் மிகப் பெரிய ஷாங்காய் நகரில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த 2,000 ராணுவ மருத்துவ ஊழியர்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களை அனுப்பியுள்ளது சீன அரசு. கடந்த 2019 இறுதியில் சீனாவில் கரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. கரோனா பெருந்தொற்றால் உலகில் 49.19 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 61.76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, சீனா உள்ளூர் அளவிலான கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக சீனா கடந்த 2 வருடங்களாக உலக நாடுகளிலிருந்து துண்டிக்கப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் ஒமிக்ரான் வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஹாங்காங்கில் இன்று 19,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவல் காரணமாக 2.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரில் இரண்டுகட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டு வந்திருந்த பொருளாதாரம் மீண்டும் பின்னடைவை சந்திக்கும் அபாயம் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து ஷாங்காய் உணவு விடுதி உரிமையாளர் டிங் கூறும்போது, “நாங்கள் 2020-ஆம் ஆண்டு முதலே கரோனா தொற்றை எதிர்கொண்டு வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் நிறைய மாற்றங்களை அனுபவித்து வருகிறோம். கரோனாவை சரியாக கட்டுப்படுத்தாததன் காரணமாக நாங்கள் ஊரடங்குக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலையில், மீண்டும் இந்தப் பேரழிவை நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஏப்ரல் முழுவதும் உணவு விடுதிகள் மூடப்படும். இந்த ஊரடங்கினால் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்படும். என் தூக்கம் மீண்டும் என்னை விட்டுச் சென்றுவிட்டது” என்றார்.

மேலும், ஷாங்காய் குடியிருப்புப் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசர தேவைகளுக்குக் கூட வெளியே செல்லாமல் தவித்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக, தனது கணவரின் புற்றுநோய் சிகிச்சைக்காக தன்னை வெளியே அனுப்புங்கள் என்று சீன ராணுவத்தினரிடம் பெண் ஒருவர் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஊரடங்கால் சரியும் சீனப் பொருளாதாரம்:

சீன ஊரடங்கு குறித்து ஆசியாவின் பொருளாதார நிபுணர் பாங்கோ பில்பாவோ விஸ்காயா அர்ஜென்டாரியா கூறும்போது, “ஊரடங்கு ஏப்ரல் / மே மாதம் நீடித்தால் சீனாவின் வளர்ச்சி 0.3 - 0.5 சதவீதம் குறையும். காலாண்டு முழுவதும் நீடித்தால், அது சீனாவின் வளர்ச்சியை 1.5 - 2 சதவீதம் குறைக்கும்” என்று தெரிவித்தார்.

சீனாவில் இதுவரை 1,60,116 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,638 பேர் பலியாகியுள்ளனர். எனினும் சீனா அளிக்கும் இந்த எண்ணிக்கையில் உண்மையில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் சந்தேகிப்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x