

நியூயார்க்: அமெரிக்க விமான நிலையத்தில் சுயமாக செக்-இன் செய்த பயணிகளிடம் "நீங்கள் ஒரு பயங்கரவாதியா?" கேட்கப்பட்ட கேள்வி விவாதப் பொருளாகி இணையத்தில் வைரலானது.
விமான நிலையங்களில் எப்போதுமே பாதுகாப்பு கெடுபிடிகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதுவும் அமெரிக்கா மாதிரியான நாடுகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சொல்லவே வேண்டாம். சந்தேகத்திற்கு இடம் கொடுக்கும் நபர்களை அவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையவே அனுமதிக்க மறுப்பார்கள். இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கூட கடந்த காலங்களில் அமெரிக்க இமிகிரேஷன் அதிகாரிகளால் தடுத்து நிறுத்திப்பட்டுள்ளனர். அது செய்தியாக கூட வெளிவந்துள்ளது. இந்நிலையில், தற்போது அமெரிக்க விமான நிலையம் ஒன்றில் ‘கியாஸ்க்’ இயந்திரத்தின் மூலம் சுயமாக செக்-இன் செய்துகொள்ளும் பயணிகளிடம் ஒரு பகீர் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அந்தக் கேள்வியை அப்படியே தனது போனில் படமாக பிடித்து, ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார் சுயாதீன பத்திரிகையாளரான ஆசாத் சாம் ஹன்னா. அவரது அந்த பதிவு சமூக வலைதளத்தில் உலவும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி உள்ளது. “அமெரிக்க விமான நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிலை” என அதற்கு கேப்ஷன் கொடுத்து அந்தப் படத்தை பகிர்ந்துள்ளார் ஆசாத். அதில் ‘நீங்கள் பயங்கரவாதியா?’ என கேட்கப்படுகிறது. அதன் கீழ் ‘ஆம்’, ‘இல்லை’ என இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன.
இதனைக் கண்ட நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிந்து வருகின்றனர். அவர்களது ரியாக்ஷன்களில் சில இங்கே…
“இது நிஜமாகவே உண்மை தானா?”, “நல்ல காமெடி”, “ஆம் என பதில் அளித்தால் என்ன நடந்தது என்பது யாருக்கேனும் தெரியுமா?” என ட்விட்டர் பயனர்கள் கேட்டு வருகின்றனர்.