Published : 06 Apr 2022 01:29 AM
Last Updated : 06 Apr 2022 01:29 AM

பெரும்பான்மை இழந்தது ராஜபக்சே அரசு - இலங்கையில் அவசரநிலை வாபஸ்

கொழும்பு: இலங்கையில் ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைக்கு வந்த அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்துள்ளார் அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. பல தசாப்தங்களுக்கு பிறகு இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி இது.

இதனால் நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

மக்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, ஏப்ரல் 1ம் தேதி அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். கிட்டத்தட்ட ஐந்து நாள்களுக்கு பிறகு இன்று அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் கோத்தபய ராஜபக்சே. அந்நாட்டின் கெஜெட்டில், ஏப்ரல் 5-ம் தேதி நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடன சட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முறைப்படி அமல்ப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகரித்து வரும் அமைதியின்மைக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது மூத்த சகோதரர் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தவிர இலங்கையின் அமைச்சரவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ராஜினாமா செய்தனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையிலான ஆளும் கூட்டணி தனது பெரும்பான்மையை இழந்தது.

வலுத்து வரும் போராட்டம்: பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி நேற்று எதிர்க்கட்சியினர் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்பு வேலிகளை அகற்றிய அவர்கள் ராணுவ வாகனத்திற்கு தீ வைத்தனர். இதனால் முற்றுகை போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைத்தனர். பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் காயமடைந்தனர். இந்த போராட்டம் காரணமாக கொழும்பு நகரில் பதற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொடை ஆகிய பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பெரும்பான்மை இழந்தது மகிந்த ராஜபக்ச அரசு:

இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியின் 12 அதிருப்தி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தனித்து செயல்பட முடிவு செய்ததால் அரசு பெரும்பான்மை ஆதரவை இழந்துள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இலங்கையில் அந்நியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத வகையில் சரிந்தது. இதனால் அந்நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச மட்டுமின்றி அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர்.

இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, 36 மணி நேர ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

எனினும் இந்த உத்தரவை மீறி மக்களின் போராட்டம் வலுத்தது. இதனால் இலங்கையின் அனைத்து அமைச்சர்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து அனைத்து கட்சிகளையும் கொண்ட ஒருங்கிணைந்த அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த அழைப்பை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. இதனால் இடைக்கால அமைச்சர்களாக 4 பேரை அதிபர் கோத்தபய நேற்று முன்தினம் நியமித்தார். இவர்களும் உடனே பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு நேற்று பெரும்பான்மை இழந்தது.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப் படுகிறது.

ஆளும் லங்கா பொதுஜன பெரமுனவுக்கு (எஸ்எல்பிபி) 117 உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சியான லங்கா சுதந்திரக் கட்சிக்கு 15 உறுப்பினர்களும் உள்ளனர். மேலும் ஆளும் கூட்டணியில் சேர்ந்த 10 கட்சி கூட்டணிக்கு 14 உறுப்பினர்கள் இருந்தனர்.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்களும் ஆளும் கட்சியின் 12 அதிருப்தி எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் தனித்து செயல்பட முடிவு செய்தனர். இதனால் அரசுக்கான ஆதரவு நேற்று 105 ஆக குறைந்து, ராஜபக்ச அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் ராஜபக்ச தனது அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்க பிற கட்சிகளின் ஆதரவைப் பெறவேண்டியது அவசியமாகியுள்ளது.

ஆனால் ஆளுங்கட்சி தரப்பில் அதிருப்தியாளர்கள் எண்ணிக்கை 41-ல் இருந்து மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில், இடைத் தேர்தலை நடத்துவதற்காக பொறுப்பு அரசாங்கத்தை அதிபர் நியமிப்பது அவசியமாகும் என கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x