Published : 04 Apr 2022 07:08 PM
Last Updated : 04 Apr 2022 07:08 PM

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது: இம்ரான் கான் பரிந்துரை

பாகிஸ்தான் முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது (கோப்புப் படம்)

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால பிரதமர் பதவிக்கு முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமதுவின் பெயரை பிரதமர் இம்ரான் கான் பரிந்துரை செய்துள்ளார்.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசின் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த பின்னர், அவரின் அரசு பெரும்பான்மையை இழந்தது. இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு நடக்க இருந்த நிலையில், துணை சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது என்று கூறி அதனை நிராகரித்தார். இதனைத் தொடர்ந்து, இம்ரான் கானின் ஆலோசனையின் பேரில் பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வி அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிவிப்பின்படி, இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரை, இம்ரான் கான் பிரதமராக தொடரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் இம்ரான் கான், எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு அதிபர் அல்வி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஞாயிற்றுக்கிழமை கலைக்கப்பட்டது. பிரதமரும், எதிர்கட்சித் தலைவரும், இடைக்கால பிரதமரின் பெயரினை பரிந்துரைக்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் அவர்கள் இந்த நியமனத்திற்கு உடன்படவில்லையென்றால், சபாநாயகரால் அமைப்படும் கலைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பிகளைக் கொண்ட குழுவிற்கு, பிரதமரும், எதிர்கட்சித் தலைவரக்ளும் இரண்டு வேட்பாளர்களை முன்மொழிய வேண்டும். இந்தக் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சம அளவில் இருப்பார்கள். அவர்கள் பிரதமர் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவருடன் கலந்தாலோசித்து இடைக்கால பிரதமைரை நியமிக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டம், அதிபருக்கு வழங்கியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப், "நாங்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்கப் போவதில்லை. அதிபரும், பிரதமரும் சட்டத்தை மீறியுள்ளனர். இந்த சட்டவிரோத செயலுக்கு அவர்கள் எதிர்கட்சியை எவ்வாறு அணுக முடியும்" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, "பாகிஸ்தான் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. எதிர்கட்சித் தலைவர் இந்த செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க மாட்டேன் என்கிறார். அது அவரது விருப்பம். நாங்கள் இன்று இரண்டு பெயர்களை அதிபருக்கு பரிந்துரைத்துள்ளோம். ஏழு நாட்களுக்குள் அவர்கள் (எதிர்கட்சித் தலைவர்) யாரையும் பரிந்துரைக்க வில்லையென்றால் இவைகளில் ஒன்று இறுதி செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நேற்று தாமாக முன் வந்து உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள வழக்கில், நீதிபதி உமர் அதா பண்டியல் , "நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பாக பிரதமர் மற்றும் அதிபரால் வெளியிடப்படும் அனைத்து உத்தரவுகள், நடவடிக்கைகள் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது" என்றார். மேலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என்று அனைத்துத் தரப்பினருக்கும் உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x