Published : 04 Apr 2022 03:53 PM
Last Updated : 04 Apr 2022 03:53 PM

சதி குற்றச்சாட்டை மார்ச் 24-ல் ஏன் சொல்லவில்லை - இம்ரான் கானுக்கு பாக். எதிர்கட்சித் தலைவர் கேள்வி

பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் (கோப்புப் படம்)

இஸ்லாமாபாத்: "நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதும், இதில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறும் பிரதமர் இம்ரான் கான், சதி பற்றி தெரிந்ததும் ஏன் அதைச் சொல்லவில்லை?" என பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானின் மீது எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடக்க இருந்த இருந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை அந்நாட்டின் துணை சபாநாயகர், இது அரசியலமைப்புக்கு எதிரானது என நிராகரித்தார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய இம்ரான் கான், நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அதிபருக்கு தான் கடிதம் எழுதியுள்ளதாகவும், பாகிஸ்தானில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தன் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறும் இம்ரான் கானின் கருத்தை, அந்நாட்டு எதிர்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் மறுத்துள்ளார். இதுகூறித்து அவர் கூறும்போது, "நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இம்ரான் கானுக்கும் அவரது கட்சியினருக்கும் ஆட்சேபனை இருந்திருந்தால், அவர் அதை ஏன் மார்ச் 24-ம் தேதியே நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை.

அரசியலமைப்பு சட்டத்தின்படி நடக்க இருந்த இழப்பைச் சந்திக்க முடியாமல், அவர்கள் வெளிநாட்டு சதி இருப்பதாக பேசியுள்ளனர். இம்ரான் கானும் அவரது கட்சியினரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளனர். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது மார்ச் 8-ம் தேதி. அவர்கள் சொல்லுவது போல, மார்ச் 7-ம் தேதி அமெரிக்காவில் இருந்து செய்தி வந்திருந்தால், அதை இம்ரான் கானும் அவரது கட்சியினரும் அதை ஏன் மார்ச் 24-ம் தேதியே நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை.

வெளிநாட்டு சதி எனப் பேசுவதெல்லாம் அவர்களின் வீண் எண்ணமே. அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியாக வரவிருந்த இழப்பை சந்திக்க முடியாத இம்ரான் மற்றும் அவரது கட்சியினர், ஜனநாயகத்தை காயப்படுத்தி, அரசியலமைப்பை மீறியுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்களுக்கான உதவி செயலாளர் டொனால்ட் லூ, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆசாத் மஜீத் மூலமாக தனக்கு மிரட்டல் செய்தி அனுப்பியதாக இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் "நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அந்நிய சக்திகளின் தலையீட்டை தேசிய பாதுகாப்பு கவுன்சில் கண்டித்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்துவது அர்த்தமற்றது" என்று கூறியிருந்தார்.

தன்னை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான வெளிநாட்டு சதியில் அமெரிக்காவின் பங்கு இருப்பதாக கூறும் இம்ரான் கானின் கருத்தை அமெரிக்கா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x