

இந்தியா, பாகிஸ்தான் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறுவுத் துறை துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா, பாகிஸ்தான் இடையே சுமூகமான நல்லுறவு ஏற்படவும், அதன் யதார்த்தமான பலன்களைப் பெறவும், இரு நாடுகளும் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அப்போது தான் இரு நாட்டுக்கும் இடையே நீடித்து வரும் பதட்டம் தணியும். இதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா வலுவாக ஆதரிக்கும். ஏனெனில் இரு நாட்டுக்கும் இடையே ஏற்படும் நல்லுறவு ஆசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும்.
அதே சமயம் காஷ்மீர் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சினைக்கு இரு தரப்பும் தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மார்க் டோனர், ‘‘இந்திய அதிகாரி கைது செய்யப்பட்டது உண்மையா என்பதை அறிந்து கொள்ள முனைப்பு காட்டி வருகிறோம். இதுவரை எந்தத் தகவலும் வந்து சேரவில்லை’’ என்றார்.
முன்னதாக நேற்று (வியாழன்) இந்தியாவுடனான பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம் என இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பசித் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.