Published : 02 Apr 2022 03:33 PM
Last Updated : 02 Apr 2022 03:33 PM

நெருக்கடியான தருணத்தில் கைகொடுத்த இந்தியா: 40 ஆயிரம் டன்கள் டீசல் இலங்கை வந்தது; அடுத்து அரிசி

கொழும்பில் உள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டு ஸ்தாபன எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்

கொழும்பு: டீசல் இல்லாமல் வரலாற்றில் இல்லாத அளவு மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கைக்கு தக்க தருணத்தில் 40 ஆயிரம் டன்கள் டீசலை இந்தியா அனுப்பியுள்ளது. இந்த டீசல் தற்போது இலங்கை வந்துள்ள நிலையில் உடனடியாக மாலையே விநியோகம் தொடங்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

டீசல், பெட்ரோல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதுடன் அது கிடைக்கவும் இல்லை. வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. டீசலுக்குரிய பணத்தை செலுத்த முடியாத சூழலில் இலங்கை உள்ளது.

இதனால் டீசல் விற்பனை கிடையாது என கடந்த 2 நாட்களுக்கு முன்பாக பெட்ரோல் நிலையங்களில் பலகைகள் தொடங்க விடப்பட்டன. டீசல் வாகனங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. கையிருப்பு டீசல் தீர்ந்து பெரும் நெருக்கடிக்கு இலங்கை ஆளாகியுள்ளது. போராட்டத்தை ஒடுக்க அவசர நிலையும் அங்கு பிரகடனமும் செய்யப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40,000 டன்கள் டீசல் வழங்கியுள்ளது. இதனை இலங்கை இலங்கை பெட்ரோலிய கூட்டு ஸ்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்கே உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியா அனுப்பிய டீசல் இன்று காலை இலங்கையை வந்தடைந்தது. இது நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

இன்று மாலை முதல் டீசல் விநியோகம் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் காணாத மோசமான நெருக்கடியைச் சமாளிக்க போராடி வரும் இலங்கைக்கு 500 மில்லியன் டாலர் எரிபொருள் உதவியின் ஒரு பகுதியாக டீசலை இந்தியா அனுப்பியுள்ளது.

இதுமட்டுமின்றி இதேபோல் 40 ஆயிரம் டன்கள் அரிசியையும் அனுப்ப இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மாதம் இரு நாடுகளும் 1 பில்லியன் டாலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன். இதன் தொடர்ச்சியாக பொருளாக உதவி அனுப்பவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் இருமடங்காக உயர்ந்துள்ள பொருட்களின் விலையை இலங்கை அரசு குறைக்க முடியும்.

இதுகுறித்து பட்டாபி அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குனர் பி.வி.கிருஷ்ணா ராவ் கூறுகையில் ‘‘அரிசியை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கான கொள்கலன்களை நாங்கள் முதலில் ஏற்றி வருகிறோம், மேலும் சில நாட்களில் கப்பல் ஏற்றும் பணி தொடங்கும்’’ என்றார்.

இந்திய மற்றும் இலங்கை அரசுகள் இடையே செய்து கொள்ளப்பட்ட கடன் வசதி ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை அரசின் வர்த்தக நிறுவனத்துக்கு இந்தியா அரிசியை வழங்குகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x