Published : 02 Apr 2022 01:00 PM
Last Updated : 02 Apr 2022 01:00 PM

மோடிக்கு துதி; வெளியுறவுக் கொள்கைகளில் சமரசம்: இம்ரான் கான் மீது பாக்., எதிர்க்கட்சித் தலைவர் அடுக்கும் குற்றச்சாட்டுகள்

இம்ரான் கான் (இடது) ஷெபாஸ் ஷரீஃப் (வலது)

இஸ்லாமாபாத்: எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால், நான் அஞ்சவில்லை. சுதந்திரமான, ஜனநாயகமான பாகிஸ்தானுக்காகப் தொடர்ந்து போராடுவேன் என்று அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தான் எதிரிக்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷரீப், "இம்ரான் கான் உலக அரங்கில் பாகிஸ்தானின் நலனை அடகுவைத்துவிட்டார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு துதிபாடி துதிபாடி இந்துத்துவாவை எதிர்த்து உயிரிழக்கும் காஷ்மீரிக்களை அவமதிக்கிறார். அவர், பாகிஸ்தான் வெளியுறவு கொள்கைகளுக்கு செய்துள்ள சேதம் மதிப்பிடவே முடியாதது " என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை (ஏப். 3ஆம் தேதி) நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடக்கவுள்ள நிலையில் ஏஆர்ஒய் நியூஸ் சேனலுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர், "எனக்கு ராணுவம் மூன்று வாய்ப்புகளை அளித்தது. ஒன்று நான் ராஜினாமா செய்வது, இன்னொன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்வது மூன்றாவது வாய்ப்பு தேர்தலை முன் கூட்டிய நடத்துவது. ஆனால் நான் ராஜினாமா செய்யப்போவதில்லை.
எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. உயிருக்கு மட்டுமல்ல எனது நடத்தையையும் கேள்விக்குறியாக்கியுள்ளனர். என்னுடைய மனைவியையும் இந்தத் தாக்குதலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷரீஃபிடம் இனி பேசுவதற்கு எதுவுமே இல்லை. அவரைப் போன்ற பிறழ்களை வைத்து எதுவும் செய்ய முடியாது. ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பினாலும் கூட முன் கூட்டி தேர்தல் நடத்துவதையே சிறந்த வழியாகப் பார்க்கிறேன். தேர்தலில் எனக்கு மக்கள் சாதாரண பெரும்பான்மையையாவது தர வேண்டும் என வேண்டுகிறேன். இனி கூட்டணிக் கட்சிகளுடன் சமரசம் செய்ய முடியாது. லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீஃபை ஹுசைன் ஹக்கானி போன்றோர் சந்தித்து வருகின்றனர். என்னை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது வெளிநாட்டுச் சதி. என்னிடம் இதற்கான ஆதாரக் கடிதங்கள் உள்ளன" என்று கூறியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றியுள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஷெபாஸ் ஷரீப், "இம்ரான் கான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு துதிபாடி துதிபாடி இந்துத்துவாவை எதிர்த்து உயிரிழக்கும் காஷ்மீரிக்களை அவமதிக்கிறார் " என்று கூறியுள்ளார்.

ஷெபாஸ் ஷரீஃப் தான் அடுத்த பிரதமராவார் என்று கணிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x