Published : 02 Apr 2022 09:45 AM
Last Updated : 02 Apr 2022 09:45 AM
இஸ்லாமாபாத்: கடந்த பிப்ரவரி 23, 24-ம் தேதி களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. இதன்காரணமாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இம்ரான் மீது கடும் அதிருப்தியில் உள்ளன.
தற்போது பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதாரநெருக்கடி எழுந்துள்ளது. இதையடுத்து இம்ரான்கானை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 எம்பிக்களில் இம்ரான் கானுக்கு 140 எம்.பி.க்களும் எதிர்க்கட்சிகளுக்கு 200 எம்.பி.க்களின் ஆதரவும் உள்ளது. நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக் கையில்லா தீர்மானம் மீது வாக் கெடுப்பு நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த பின்னணியில் பாகிஸ்தான் மக்களிடையே பிரதமர் இம்ரான் ரான் நேற்று முன்தினம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அமெரிக்காவின் சதியால் தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல் அவர் பேசினார். அவர் கூறியதாவது:
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவுக்கு அரசு முறை பயணம் மேற் கொண்டதால் வலிமையான நாடு (அமெரிக்கா) என் மீது கோபம் கொண்டுள்ளது. சுதந்திரமான வெளியுறவு கொள்கை இல்லாத நாட்டால் மக்களின் நலன்களை பாதுகாக்க முடியாது.
இந்தியாவை பொறுத்தவரை சுதந்திரமான வெளியுறவு கொள் கையை பின்பற்றி வருகிறது. அந்த நாடு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. ஆனால் இந்தியா மீது வலிமையான நாடு (அமெரிக்கா) கோபம் கொள்ளாமல் நேசமாக செயல்படுகிறது. என் மீது மட்டும் கோபம் கொள்வது ஏன்?
இவ்வாறு இம்ரான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா அரசு ரகசிய கடிதம் அனுப்பியிருப்பதாகவும், அந்த கடிதத்தில் இம்ரான் கானை பதவியில் இருந்கு நீக்கினால் பாகிஸ்தானை மன்னிக்க தயார் என்று கூறப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையும் பிரதமர் இம்ரான் கான் தனது பேச்சில் மறைமுகமாக சுட்டிக் காட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT