Published : 01 Apr 2022 07:59 AM
Last Updated : 01 Apr 2022 07:59 AM
இஸ்லாமாபாத்: எனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானில் பணவீக்கம் உயர்ந்து, கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சி கள் சார்பில் கடந்த 28-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை யில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே இம்ரான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முத்தாஹிதா குவாமி இயக்கம் வாபஸ் பெற்றது. இதனால் இம்ரான் கான் அரசின் பலம் 164 ஆக குறைந்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 342 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 172 எம்.பி.க்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் இம்ரான் கான் பதவி விலக நேரிடும்.
இந்த சூழலில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. உடனடியாக தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதை ஆளும் தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை.
இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவியதால் வரும் ஏப்ரல் 3-ம் தேதி காலை 11.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. எனவே ஏப்ரல் 3-ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடி வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் இம்ரான் கான் நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறும்போது, “அமெரிக்க அரசின் கடிதத்தில் இம்ரான் கானை பதவியில்இருந்து நீக்கினால் பாகிஸ்தானை மன்னிக்கத் தயார் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ராணுவம், இதர தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டேன். எனினும் எனக்கு எதிராக சதி தீட்டப்படுகிறது. பதவி விலக மாட்டேன். நம்பிக்கை வாக்கெடுப்பில் என்ன நடந்தாலும் கவலையில்லை. நாங்கள் மீண்டும் அதிக பலத்தோடு திரும்பி வருவோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT