

ஹாங்காங்கில் கல்லறை கட்ட இடம் இல்லை. இந்த நகரில் ஆண்டுக்கு 40 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். பொது இடுகாடுகளில் அவர்களை புதைக்க இடம் கிடையாது. கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சொந்தமாக கல்லறை அமைப்பதற்கு இடம் கிடைக்காமல் போராடி வருகிறார்கள்.
நிலப்பற்றாக்குறை காரணமாக 1970களில் நிரந்தர கல்லறை அமைப்பதற்கு ஹாங்காங் நிர்வாகம் தடை விதித்தது. 6 ஆண்டுகள் ஆன புதைகுழிகளை தோண்டி உள்ளே உள்ள கூடுகளை எரித்து புதிய ஆட்க ளுக்கு வழி செய்து தரும்படி பொது இடுகாடுகளை பராமரிப் போருக்கு ஹாங்காங் நிர்வாகம் உத்தரவிட்டது.
இருப்பினும் சவக்குழிகளுக்கு பற்றாக்குறை தீர்ந்த பாடில்லை. ஒருவேளை தேவாலயங்களில் அங்கத்தினராக உள்ள ஒருவர் இறந்தால் அவருக்கு அங்குள்ள தனி இடுகாட்டில் கல்லறை அமைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்கு 4 லட்சம் டாலர் வரை செலவு ஆகும்.
இடப்பற்றாக்குறை காரணமாக அரசு எடுத்துள்ள புதிய கொள்கை முடிவால் அதிக அளவில் இப்போது சவங்கள் எரிக்கப்படுகின்றன. அப்படி செய்தாலும் கல்லறை அமைக்க திட்டமிடுவோருக்கு மாற்று ஏற்பாடு இல்லை.