Published : 31 Mar 2022 07:37 AM
Last Updated : 31 Mar 2022 07:37 AM
கொழும்பு: எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், இலங்கை அரசு நாடு முழுவதும் மின் வெட்டு நேரத்தை 10 மணி நேரமாக நீட்டித்துள்ளது. இம்மாத தொடக்கம் முதலே இலங்கையில் 7 மணி நேரம் மின்வெட்டு நடைமுறையில் இருந்தது.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை உள்ளது. இதனால், அங்கு எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அவற்றின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
எரிபொருள் வாங்குவதற்காக மக்கள், விடிவதற்கு முன்பாகவே எரிபொருள் நிலையத்துக்குச் சென்று காத்திருக்கின்றனர். ஐந்துமணி நேரம் காத்திருந்தே எரிபொருள் வாங்க முடிவதாக கூறப்படுகிறது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பல குடும்பங்கள் 3 வேளை உணவை 2 வேளை யாக குறைந்துள்ளது. உணவு விடுதிகள் மூடப்பட்டுவருகின்றன. மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். நாளுக்கு நாள் சூழல் மோசமடைந்து வருகிறது.
கடந்த பத்து ஆண்டுகளாகவே இலங்கையின் அந்நிய கடன் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது.இதனால் இலங்கையின் அந்நியசெலாவணி கையிருப்பு குறைந்தது. இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டின் தவறான பொருளாதாரக் கொள்கையே அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கைஅரசுக்கு எதிராக மக்கள் கடும்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT