Published : 29 Mar 2022 04:38 PM
Last Updated : 29 Mar 2022 04:38 PM

உக்ரைன் 2 துண்டாகிறது? - போரில் வெல்ல ரஷ்ய அதிபர் புதின் புதிய வியூகம் 

ரஷ்ய அதிபர் புதின்: கோப்புப் படம்

மாஸ்கோ: உக்ரைனை முழுமையாக கைப்பற்ற வாய்ப்பு இல்லாத நிலையில் ரஷ்ய அதிபர் புதின் புதிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா, தென்கொரியா போன்று உக்ரைனை இரு துண்டாக பிரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு மாதத்துக்கு மேலாகத் தொடர்கிறது. அதேநேரம் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.

உக்ரைன் போரில் ரஷ்யா சுமார் 2 லட்சம் வீரர்களை களமிறக்கி உள்ளது. அவர்களில் 15 ஆயிரம் பேர் வரையில் இந்தப் போரில் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. பல நாட்கள் ஆன பிறகும் ரஷ்யாவால் போரில் வெற்றி பெற முடியவில்லை. இந்தநிலையில் போரை முடிவுக்கு கொண்டு வரவும், உக்ரைனை கட்டுக்குள் கொண்டு வரவும் புதிய வியூகம் ஒன்றை ரஷ்ய அதிபர் புதின் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டு துண்டாக பிரிக்கலாம் என்று உக்ரைன் உளவுத்துறை அண்மையில் எச்சரிக்கை விடுத்து இருந்தது. உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியாததால் நாட்டை இரண்டு துண்டாக பிரிக்க ரஷ்ய அதிபர் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் புடானோவ் தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா, தென்கொரியா போன்று உக்ரைனை இரு துண்டாக பிரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவம் உக்ரைனின் முழுமையான பகுதிகளை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்த புதின் நாட்டை இரண்டாக பிரிக்க திட்டமிட்டுள்ளார் எனக் கூறினார்.

உளவுத்துறை தலைவர் புடானோவ் கூறியதாவது:

உக்ரைனில் ஆக்கிரமிக்கப்படாத மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் என இரண்டாக பிரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் திட்டமிட்டுள்ளார். உக்ரைன் என்ற முழு நாட்டையும் விழுங்கும் நிலை ரஷ்யாவுக்கு சாதகமாக தற்போது இல்லை. இதனால் உக்ரைனில் வட மற்றும் தென் கொரியா போன்று இரண்டு நாடுகளாக உருவாக்கும் முயற்சியில் புதின் இறங்கியுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை இணைத்து ஒரு ஒற்றை அரசு அமைத்து இணைக்க முயற்சிப்பர், இதன் மூலம் சுதந்திரமான உக்ரைனை ரஷ்யா எதிர்க்கும். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ‘இணை' அதிகாரிகளை உருவாக்கி, உக்ரேனிய நாணயத்தை கைவிட மக்களை கட்டாயப்படுத்தும்.

2014- இல் உக்ரேனிய தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றிய பின்னர் கிரிமியாவில் நடந்ததைப் போலவே இதுப்போதும் நடக்கக்கூடும். கிரிமியா உக்ரைனுடன் உறவை முறித்துக் கொண்டு ரஷ்யாவுடன் சேர பெருமளவில் வாக்களித்தனர்.

ஆனால் உலகின் பெரும்பகுதி நாடுகள் இந்த வாக்கெடுப்பை அங்கீகரிக்க மறுத்தன. தற்போது லுஹான்ஸ்க் மக்கள் குடியரசின் சார்பில் உள்ளூர் தலைவர் ஒருவர், ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பை விரைவில் நடத்தக் கூடும். ஆனால் இதனை உலகம் ஏற்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்யா திட்டம்

உக்ரைன்: பிரதிநிதித்துவப் படம்

உக்ரைனைச் சேர்ந்த டோனஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய 2 நகரங்களை தன்னாட்சி பிரதேசமாக ரஷ்யா ஏற்கெனவே அறிவித்துள்ளது. அந்த பகுதிகளுடன் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியைச் சேர்ந்த சில நகரங்களையும் இணைத்து அவற்றை தனி நாடாக, உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெற்ற பகுதியாக அறிவித்து விடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு ஏதுவாக டோனஸ்க் மற்றும் லுகான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளில் ரஷ்ய ராணுவம் குவிக்கப்படுகிறது. மற்ற பகுதிகளில் இருந்து வீரர்களை திரும்பப் பெற்று அவர்களை கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் குவித்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் உக்ரைனுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x