Published : 26 Mar 2022 07:15 AM
Last Updated : 26 Mar 2022 07:15 AM

உக்ரைனில் சிங்கம், ஓநாயை காப்பாற்றிய வீரர்

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட சிங்கம் `சிம்பா`

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் மக்கள் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை, பதுங்கு குழிகள், கட்டிடங்களின் அடித்தளங்களில் தஞ்சம் அடைந் துள்ளனர். போரால் மக்கள் மட்டு மின்றி விலங்குகளும் பாதிக்கப் பட்டுள்ளன. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு போதுமான உணவுகள் கிடைக்கவில்லை.

இதனிடையே, தென்கிழக்கு உக்ரைனின் ஜிபோரிஜியாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்கா வில் சிம்பா என்ற சிங்கம் பராமரிக்கப்பட்டு வந்தது. போர் காரணமாக சிங்கத்தை ருமேனியாவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதேபோல் அகேலா என்று பெயரிடப்பட்ட ஓநாயையும் கொண்டு செல்லும் ஏற்பாடுகளை விலங்குகள் உரிமை குழு மேற்கொண்டது.

இதையடுத்து சிம்பா சிங்கம், ஓநாய் ஆகியவை கூண்டுகளில் அடைக்கப்பட்டன. பின்னர் அந்த கூண்டுகள் வேனில் ஏற்றப்பட்டு ருமேனியாவுக்கு புறப்பட்டது. போர் சூழலில், ஆபத்துக்கள் நிறைந்த பகுதிகளில் அந்த வேனில் சென்றவர்கள் பயணத்தை மேற்கொண்டனர். 4 நாட்கள் பயணத்துக்கு பிறகு சிங்கம் மற்றும் ஓநாய் பாதுகாப்பாக ருமேனியா நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ராடெவுட்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் இரு விலங்குகளும் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

இதுகுறித்து விலங்கு உரிமை குழுவின் செபாஸ்டியன் தரலுங்கா கூறும்போது, “விலங்கு களை ஏற்றிச் சென்ற வேன் ருமேனியாவின் சிரட் எல்லை வழியாக செல்ல அதிகாரிகளால் அனுமதியை பெற முடியவில்லை. இதனால் இரு நாடுகளின் பொது வான எல்லை வழியாக வேன் சென்றது. மேற்கில் இருந்து கிழக்கில் சுமார் 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்தனர். இந்தப் பயணத்தை பிரிட்டனை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் டிம் லாக்ஸ் வெற்றிகரமாக முடித் துள்ளார். 45 வயதான டிம் லாக்ஸ், இராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போரில் ஈடுபட்டவர்” என்றார்.

டிம் லாக்ஸ் கூறும்போது, “தற்போது ருமேனியா உயிரியல் பூங்காவின் சூழ்நிலைக்கு விலங் குகள் பழகி வருகின்றன. வரும்வழியில் சோதனைச் சாவடிகளில்சிங்கம், ஓநாயை ஏற்றிச் செல்கிறோம் என்று தெரிவித்தபோது அவர்கள் குழப்பமடைந்தனர். போர்நடக்கும் சமயத்தில் நகைச்சுவையாகப் பேசாதீர்கள் என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பின்னர் வேனில் சிங்கத்தையும், ஓநாயையும் காட்டியபோது தான் அவர் நம்பினார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x