

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்தியர்களின் பட்டியலை அந்த நாட்டு அரசு தயார் செய்து வருகிறது. அந்த பட்டியல் இந்திய அரசிடம் தரப்படும் என்று சுவிட்சர்லாந்து அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரூ.120 லட்சம் கோடி கருப்புப் பணம்
வெளிநாடுகளில் சுமார் ரூ.120 லட்சம் கோடி கருப்புப் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக அசோசேம் அமைப்பு அண்மையில் சுட்டிக்காட்டியது.
அந்த கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் சுவிட்சர்லாந்து அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதன் விளைவாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்தியர்கள் குறித்து அந்த நாட்டு அரசு இப்போது ஆய்வு செய்து வருகிறது.
இதுகுறித்து அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியபோது, அறக்கட்டளைகள், நிறுவனங்கள் பெயரில் முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம், இந்த ஆய்வின்போது சொந்த நாட்டில் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் பணம் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் குறித்து பட்டியல் தயாரித்து வருகிறோம். அந்த பட்டியல் இந்திய அரசிடம் தரப்படும் என்றார்.
இந்தியா - சுவிட்சர்லாந்து இடையே கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தின்படி எந்தத் தகவலையும் பகிரங்கமாக வெளியிட முடியாது. இந்த விவகாரத்தில் ரகசியம் காக்கப்படும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
இந்தியாவில் பதவியேற்றுள்ள புதிய அரசோடு இணைந்து பணியாற்ற சுவிட்சர்லாந்து அரசு தயாராக உள்ளது. குறிப்பாக கருப்புப் பணம் மீட்பு தொடர்பாக இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு சுவிட்சர்லாந்து அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
ரூ.14,000 கோடி கருப்புப் பணமா?
சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியான சுவிஸ் நேஷனல் பேங்க் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ரூ.14,000 கோடியாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுவிஸ் அதிகாரியிடம் கேட்டபோது, இந்தப் பணம் நிச்சயமாக கருப்புப் பணமாக இருக்க முடியாது, ஏனென்றால் அந்தப் பணத்தை முதலீடு செய்துள்ளவர்கள் தங்களை இந்தியர்கள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளனர் என்றார்.
நிர்வாக ரீதியாக உதவி
சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளவர்களை கண்டுபிடிக்க சுவிட்சர்லாந்து அரசுடன் 36 நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. அதில் இந்தியாவும் அடங்கும். அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு 58-வது இடம்
சுவிஸ் வங்கிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் பணத்தைக் கொட்டி வைத்துள்ளனர். அந்த வரிசையில் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 58-வது இடத்தில் உள்ளது.
2012-ம் ஆண்டில் இந்தியா 70-வது இடத்தில் இருந்தது. இப்போது 58-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சீனா 30-வது இடத்திலும் பாகிஸ்தான் 74-வது இடத்திலும் உள்ளன.