வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை: தென் கொரியா தகவல்

வடகொரிய அதிபர் கிம் (இடது) | கோப்புப் படம்
வடகொரிய அதிபர் கிம் (இடது) | கோப்புப் படம்
Updated on
1 min read

சியோல்: உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரிய புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இதனை தென் கொரிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தென்கொரிய ராணுவம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “வடகொரியா கிழக்கு கடற்பகுதியில் இன்று ஊகிக்க முடியாத ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பம், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது. வடகொரியா ஐ.நா.வின் விதிமுறைகளை தெளிவாக மீறி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை காரணமாக ஜப்பான் கடற்படை அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், வடகொரியா நடத்திய ஏவுகணை பரிசோதனை விவரம் இதுவரை வெளிவரவில்லை.

முன்னதாக, வானில் இருக்கும்போதே இலக்குகளை தேர்ந்தெடுத்து அழிக்கும் வகையிலான டேக்டிகள் கைடட் ( tactical guided) என்ற ஏவுகணையை வடகொரியா ஜனவரி மாதம் பரிசோதித்தது. 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா இதுவரை 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே கவனம் செலுத்துகிறது என்று ஐ.நா. கடந்த ஆண்டு கண்டித்திருந்தது. இந்த நிலையில், வடகொரியா மீண்டும் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது.

தங்கள் நாட்டின் பாதுகாப்புக்காக ராணுவ பலத்தை அதிகரிக்கவே இந்த ஏவுகணை சோதனைகளை செய்வதாக வடகொரியா தரப்பில் கூறப்பட்டது. ஆனால், இதனை ஐ.நா. சபை ஏற்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in