Published : 15 Apr 2016 10:38 AM
Last Updated : 15 Apr 2016 10:38 AM

உலக மசாலா: தனி மனிதர் உருவாக்கிய அற்புதம்!

அமெரிக்காவில் வசித்த எம்.சி. டேவிஸ் மிகப் பெரிய தொழிலதிபராகவும் சூதாட்டக்காரராகவும் இருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கினார். ஏற்கெனவே அழிந்து வரும் காடுகளைப் பாதுகாக்கவும் புதிய காடுகளை உருவாக்கவும் ஆரம்பித்தார். இதற்காகத் தன் சொத்தில் இருந்து 9 கோடி டாலர்களைச் செலவு செய்தார். ஆயிரக்கணக்கான நிலங்களை ஃப்ளோரிடாவில் வாங்கினார்.

பைன் மரங்களை வளர்த்தார். மரங்கள் ஓரளவு வளர ஆரம்பித்த பிறகு விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்றவற்றைக் கொண்டு வந்து காட்டுக்குள் விட்டார். வெளவால்களைக் காப்பதற்கு செயற்கை குகைகளை அமைத்தார். நீர்நிலைகளை உருவாக்கி, கடல் ஆமைகளை வளர்த்தார். 20 ஆண்டுகளில் 53 ஆயிரம் ஏக்கரில் காடுகளை வளர்த்திருந்தார் டேவிஸ்.

இயற்கையான காடுகளைப் போலவே புற்கள், மணற்குன்றுகள், சமவெளிகள், கழிமுகங்கள் எல்லாம் இந்தக் காட்டில் உருவாகிவிட்டன. அழிந்து வரக்கூடிய கடல் ஆமைகள் உட்பட 360 உயிரினங்கள் தற்போது வசித்து வருகின்றன. கடந்த ஆண்டு நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் டேவிஸ். இனி தான் பிழைக்க முடியாது என்று தெரிந்தவுடன், மருத்துவமனையை விட்டு வெளியேறினார். தான் அமைத்த பைன் மரக் காட்டுக்குள் வந்து தற்கொலை செய்துகொண்டார் டேவிஸ்.

சுற்றுச்சூழலைக் காக்கும் தன்னுடைய 300 ஆண்டுகாலத் திட்டத்துக்குத் தேவையான அனைத்தையும் செய்து வைத்துவிட்டார் டேவிஸ். தான் செய்த விஷயங்களை விளம்பரப்படுத்திக்கொள்ளாததால், அவர் இருக்கும்போது அவரது சாதனை வெளியே தெரியவில்லை. அவர் மறைந்த பிறகு, அமெரிக்கா முழுவதும் பேசப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சூழலியலாளர்கள், பள்ளி மாணவர்கள் என்று ஏராளமானவர்கள் இந்தக் காடுகளுக்கு வந்து செல்கிறார்கள்.

தனி மனிதர் உருவாக்கிய அற்புதம்!

டோக்கியோவில் உலகின் முதல் முள்ளெலி கஃபே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. முள்ளெலி ஜப்பானைத் தாயகமாகக் கொண்ட விலங்கு அல்ல. ஆனாலும் ஜப்பானியர்கள் முள்ளெலிகளைச் செல்லப் பிராணியாக வளர்ப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அதனால் விதவிதமான 30 முள்ளெலிகளை ஹாரி கஃபேயில் வைத்திருக்கிறார்கள். சாப்பிட வருகிறவர்கள் முள்ளெலிகளுடன் பல மணி நேரம் செலவிடலாம். கைகளில் வைத்து விளையாடலாம். முட்கள் இருந்தாலும் முறையாகக் கையாண்டால் ஆபத்து இல்லை என்பதால், விரும்பி வருகிறார்கள்.

ஒருவேளை முள்ளெலியை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பினால், 600 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். ’’ஜப்பானில் இருக்கும் பூனை கஃபே, முயல் கஃபே போன்றவற்றைப் பார்த்துதான் இதை ஆரம்பித்திருக்கிறோம். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தது. ஆனால் இப்போது கஃபேக்குள் நுழைவதற்கு வரிசையில் காத்திருக்கிறார்கள். முள்ளெலிகளும் மனிதர்களுடன் எளிதில் அன்பாகப் பழகிவிடுகின்றன. மனிதர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது’’ என்கிறார் மிஸுகி முரட்டா.

மன அழுத்தம் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்கிறார்கள்…!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x