Published : 21 Mar 2022 05:07 PM
Last Updated : 21 Mar 2022 05:07 PM

132 பேருடன் சென்ற சீன போயிங் விமானம் விபத்து: ரேடாரில் இருந்து விலகிய கடைசி நிமிடங்கள்- நடந்தது என்ன?

பீஜிங்: சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கும் நிலையில், பயணிகள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு சொற்பமானதாகக் கருதப்படுகிறது.

கடந்த 2010-ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனாவில் நடந்துள்ள மிகப்பெரிய பயணிகள் விமான விபத்து என்பதால் சீன அதிபர் ஜி சின்பிங் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரேடாரில் இருந்து விலகிய அந்த நொடி... - விபத்துக்குள்ளான விமானம் சீனாவின் தென்மேற்கு நகரான குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 1.11 மணியளவில் புறப்பட்டுள்ளது. விமானம் குவாங்சு மாகாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சரியாக 2.22 மணியளவில் விமானம் 3,225 அடி உயரத்தில் 376 நாட் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. ஆனால், அடுத்த நொடி ரேடார் கண்காணிப்பில் இருந்து விமானம் விலகியது என சீனாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

அந்த நொடியில்தான் விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் காட்டுத் தீ பரவிவிட்டதால் மீட்புப் பணிகள் சுணக்கம் கண்டுள்ளது.

இதற்கிடையில், விபத்தை நேரில் பார்த்த மலைகிராமவாசி ஒருவர், ’விமான விழுந்தவுடன் மிகப் பெரிய சத்தம் கேட்டது. தீ பிழம்பும் புகையுமாக அந்த இடம் மாறியது. சிறிது நேரத்தில் மூங்கில் காட்டில் தீ வேகமாகப் பரவியது’ என்றார்.

விபத்துப் பகுதியின் சுற்றுவட்டாரத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கின்றன. புகைப்படங்கள், காட்சிகள் உயிர் பிழைத்தோர் குறித்த நம்பிக்கையை குறைக்கும் சூழலில் சீனாவின் கிழக்கு ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது இணையதளத்தை கறுப்பு வெள்ளையாக மாற்றியுள்ளது.

சீனாவில் கடைசியாக கடந்த 2010 ஆம் ஆண்டு E-190 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 44 பேர் இறந்தனர். அதன்பின்னர் இன்று நடந்த விபத்துதான் பெரிய விபத்தாகக் கருதப்படுகிறது. இந்த விமானத்தில் 132 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 122 பேர் பயணிகள்; மீதமுள்ளோர் விமானத்தின் சிப்பந்திகள் ஆவர்.

தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்... - ஃப்ளைட் ட்ராக்கர் ஃப்ளைட் ரேடார் 24, விமான விபத்து நடந்த விதத்தைக் கணித்துள்ளது. சரியாக 2.15 மணிக்கு விமானம் தலைகுப்புற விழுந்துள்ளது. 29,100 அடி உயரத்தில் இருந்து விமானம் 9,075 அடி உயரத்திற்கு சரிந்துள்ளது. பின்னர், அடுத்த 20 வினாடிகளில் 3225 அடிக்கு சரிந்தது. அத்துடன் விமானம் தொடர்பிலிருந்து விலகியுள்ளது.

சீன அதிபர் ஜி சின்பிங் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x