அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் வலுக்கும் போராட்டம்

இலங்கையில் நடந்த போராட்ட காட்சி
இலங்கையில் நடந்த போராட்ட காட்சி
Updated on
1 min read

கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இலங்கையின் ஜிடிபி மதிப்பு மைனஸ் 16.3 சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அந்நியச் செலாவணி குறைந்ததால், இலங்கை பணத்தின் மதிப்பும் குறைந்தது. பணத்தின் மதிப்பு குறைந்ததால், ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.250, சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 உளுந்து கிலோ ரூ.2,000 ஆகவும் விற்கப்படுகிறது.

இதுமட்டுமின்றி அந்நிய செலவாணி கையிருப்பு குறைவால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது.பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

மூடப்படும் உணவகங்கள்:இலங்கை கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், விறகு அடுப்பினால் சமைக்கும் உணவகங்கள் மட்டுமே செயல்படுவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போராட்டம்: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தப்ய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகை அருகில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் தலைமையில் பத்தாயிரத்துக்கு அதிமானோர் கலந்து கொண்டு கோத்தபய ராஜபக்சேவின் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவின் படங்கள் எரிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in