

கீவ்: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா 22வது நாளாக தாக்குதலை நடத்திவருகிறது. இந்நிலையில் உக்ரைனின் மரியுபோல் நகரில் டானெட்ஸ்க் திரையரங்கு உள்ளது. இந்தத் திரையரங்கில் 10000க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்திருந்தனர். இந்நிலையில், அந்தத் திரையரங்கைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு மரியுபோல் உள்ளூர் கவுன்சில் சார்பில் டெலிகிராம் சமூக வலைதளம் மூலம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 வது வாரம்.. கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா உக்ரைன் மீது தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் ரஷ்யப் படைகள் திட்டமிட்டே பொதுமக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மரியுபோல் நகரில் உள்ள திரையரங்கம் தகர்க்கப்பட்டது குறித்து டானெட்ஸ்க் பிராந்திய ராணுவ நிர்வாகத் தலைவர் பாவ்லோ கிரிலெங்கோ, ரஷ்யர்கள் திட்டமிட்டு உக்ரைன் மக்கள் மீது தாக்குதலை நடத்துகின்ற்னர் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா, "மரியுபோலில் ரஷ்யப் படைகள் இன்னொரு கொடூரத்தை நிகழ்த்தியுள்ளன. ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் தஞ்சம் புகுந்திரத்த திரையரங்கை ரஷ்யா தகர்த்துள்ளது. ரஷ்யர்களுக்கு இங்கு மக்கள் தஞ்சமாக தங்கியிருந்தது தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. மரியுபோலை காப்பாற்றுங்கள். ரஷ்ய போர்க் குற்றவாளிகளைத் தடுத்து நிறுத்துங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
பகிரங்கமாக அழைத்த புதின்.. இதற்கிடையில், புதன்கிழமை வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், "புதின் ஒரு 'போர்க் குற்றவாளி'. ரஷ்யப் படைகள் மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்துகிறது. மருத்துவர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது. உக்ரைன் அதிபர் அமெரிக்காவிடம் உதவிகளைக் கோரியுள்ளார். இந்தப் போரில் ரஷ்யாவுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க ஆயுதங்களை வழங்கி உக்ரைனுக்கு உதவுவோம். உக்ரைனுக்கு ஸ்விட்ச் ப்ளேட் ட்ரோன்களை அளித்து ரஷ்யாவின் ராணுவ தளவாடங்களை துல்லியமாகக் கண்டறிந்து தாக்க உதவி செய்வோம்" என்று கூறினார். முதன்முறையாக அவர் புதினை போர்க் குற்றவாளி என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
7000 வீரர்களை இழந்த ரஷ்யா! இந்நிலையில், 3 வாரங்களாக நடக்கும் போரில் ரஷ்யத் தரப்பில் 7000 வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் உக்ரைன் தரப்போ தாங்கள் இதுவரை 13500 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியதாகக் கூறுகிறது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மூன்று வாரங்களில் 498 வீரர்களை இழந்துள்ளதாகக் கூறியுள்ளது. அண்மையில் பிரிட்டன் ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றில் ரஷ்யா படைகள் இழப்பால் தவிக்கிறது. சிரியா போன்ற நாடுகளிடம் படை உதவியைக் கோரியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.