அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல் பாகிஸ்தானில் 5 தீவிரவாதிகள் சாவு

அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல் பாகிஸ்தானில் 5 தீவிரவாதிகள் சாவு

Published on

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ராணுவம் ஆள் இல்லாத விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இப்பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் தீவிரவாதிகளை முழுவதுமாக ஒழிக்கும் நோக்கில் பாகிஸ்தான் ராணுவம் இப்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க ராணுவமும் அவ்வப்போது ஆள் இல்லாத விமானங்கள் மூலம் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது.

இப்போதைய தாக்குதலில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியில் ஆள் இல்லாத விமானங் கள் மூலம் 6 ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்க ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கா நடத்தியுள்ள 3-வது தாக்குதல் இது. சில நாள்களுக்கு முன்பு நடத்தப் பட்ட இதேபோன்றதொரு தாக்குதலில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கடந்த வாரம் தலிபான் தீவிரவாதிகள் கராச்சி விமான நிலை யத்தில் தாக்குதல் நடத்தி பாகிஸ் தான் அரசை நிலைகுலையச் செய்தனர். இதில் 39 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதல்கள் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க ராணுவம் தங்கள் நாட்டு எல்லையில் நடத்தும் தாக்குதல்களை பாகிஸ்தான் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

இது தங்கள் நாட்டு இறையாண்மைக்கு எதிரான செயல் என்று தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. எனினும் அமெரிக்கா இதனைக் கண்டுகொள்ளாமல், பாகிஸ்தான் எல்லைக்குள் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

பாகிஸ்தான் நடவடிக்கை: அமெரிக்கா கருத்து

வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் அரசு எடுத்துள்ள நடவடிக்கையை அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகனின் ஊடக செயலாளர் ரியர் அட்மிரல் ஜான் கெர்பி, வஜிரிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கை மேற்கொள்வது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கெனவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும் இப்போதைய ராணுவ நடவடிக்கை தீவிரவாதிகளை முழுமையாக ஒழிக்கும் என்று நம்புகிறோம்.

எனினும் இது தொடர்பாக இப்போதே முழுமையாக கருத்து எதையும் கூற முடியாது. வடக்கு வஜிரிஸ்தானில் எவ்வளவு தீவிரமாக பாகிஸ்தான் அரசு இதில் செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தீவிரவாதம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவான எதிரிதான். எனவே அதனை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்காவுக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்று அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in