கனடாவில் சாலை விபத்தில் சிக்கி ஐந்து இந்திய மாணவர்கள் பலி

விபத்துப் பகுதி.
விபத்துப் பகுதி.
Updated on
1 min read

டொரன்டோ: கனடாவில் சாலை விபத்தில் சிக்கி ஐந்து இந்திய மாணவர்கள் பலியாகினர். கனடாவின் ஒன்டோரியொ நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை இந்த விபத்து நடந்துள்ளது.

இதனை கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிஸாரியா உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நெஞ்சைப் பிளக்கும் சோகச் சம்பவம் கனடாவில் நடந்துள்ளது. டொரன்டோ அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் ஐந்து இந்திய மாணவர்கள் இறந்தனர்.

இருவர் மருத்துவமனையில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். டொரன்டோவில் உள்ள இந்தியக் குழு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் தொடர்பில் இருந்து தேவையான உதவிகளை மேற்கொண்டு வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மாணவர்கள் சென்ற வேன், முன்னே சென்ற ட்ராக்டர் ட்ரெய்லரில் மோதி விபத்து நடந்துள்ளதாகத் தெரிகிறது.

மாணவர்களின் மறைவுக்கு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்தியத் தூதரக மாணவர்களின் குடும்பத்திற்கு அனைத்துத் தேவையான உதவிகளையும் செய்யும் எனப் பதிவிட்டுள்ளார்.

ஆண்டுதோறும், கனடாவுக்கு கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.2016ல் 76,075 இந்திய மாணவர்கள் கனடா பல்கலைக்கழங்களில் பயின்றனர். இதுவே 2018ல் 1,72,625 ஆக அதிகரித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in