Published : 14 Mar 2022 06:56 AM
Last Updated : 14 Mar 2022 06:56 AM

உக்ரைன் ராணுவ பயிற்சி தளம் மீது தாக்குதல்; 35 பேர் உயிரிழப்பு: 134 பேர் படுகாயம்

உக்ரைனின் லிவிவ் நகரில் உள்ள ராணுவ பயிற்சி தளம் மீது ரஷ்ய ராணுவம் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 134 பேர் படுகாயம் அடைந்தனர்.

ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நேற்று 18-வது நாளாக நீடித்தது. மேற்கு உக்ரைனின் லிவிவ் நகரில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி தளத்தை குறி வைத்து ரஷ்ய ராணுவம் நேற்று அடுத்தடுத்து 30 ஏவுகணைகளை வீசியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 134 பேர் படுகாயம் அடைந்தனர். உக்ரைனில் இதுவரை 3,687 ராணுவ தளங்கள் தகர்க்கப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒலிசி ரெஸ்னிகாவ் கூறும்போது, "லிவிவ் நகரம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. போர் விமானங்களும் குண்டுகளை வீசின. இதில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர். உக்ரைனில் விமானங்கள் பறக்க நேட்டோ சார்பில் தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் உக்ரைன் மக்களை காப்பாற்ற முடியும்" என்றார்.

தாக்குதல் நடத்தப்பட்ட லிவிவ் நகரம் நேட்டோவில் அங்கம் வகிக்கும் போலந்துக்கு மிக அருகே அமைந்துள்ளது. நேட்டோ நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன. உக்ரைனின் இர்பென் நகரில் அகதிகள் குறித்து செய்தி சேகரித்த அமெரிக்க நிருபர் பிரன்டை ரஷ்ய வீரர்கள் சுட்டுக் கொலை செய்தனர். உக்ரைன் போரில் முதல்முறையாக அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கீவ், கார்கிவ், மேரிபோல், கெர்சன், இர்பின், செர்னிஹிவ், வால்னோவாகா, மைகோலாவ் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் நேற்று தீவிர தாக்குதல் நடத்தியது. தலைநகர் கீவை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. தலைநகரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ரஷ்ய பீரங்கி படைகள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன.

தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நுழைந்தால் கொரில்லா முறையில் யுத்தம் நடத்த உக்ரைன் வீரர்கள் திட்டமிட்டுள்ளனர். உக்ரைனுக்கு ரூ.1,500 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

சமரச முயற்சி

ரஷ்யா, உக்ரைன் இடையே சமரசத்தை ஏற்படுத்த நேட்டோவில் அங்கம் வகிக்கும் துருக்கி தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. ரஷ்யா மீது நேட்டோ நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ள நிலையில், துருக்கி நடுநிலை வகித்து வருகிறது. அந்த நாட்டு அதிபர் எர்டோகன், ரஷ்ய அதிபர் விளாடிமின் புதினை அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதுகுறித்து துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லட் நேற்று கூறும்போது, "உக்ரைன் அதிபர் ஜெலன்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் புதின் தயாராக உள்ளார்" என்று தெரிவித்தார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்கி கூறும்போது, "ரஷ்யாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன். இதற்கு இஸ்ரேல் அரசு உதவ வேண்டும்" என்றார். துருக்கியின் சமரசத்தை ஜெலன்கி தவிர்ப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x