இந்திய விஞ்ஞானி ராஜாராமுக்கு உலக உணவு விருது: கோதுமை உற்பத்தியை 20 கோடி டன் அதிகரித்தவர்

இந்திய விஞ்ஞானி ராஜாராமுக்கு உலக உணவு விருது: கோதுமை உற்பத்தியை 20 கோடி டன் அதிகரித்தவர்
Updated on
1 min read

இந்திய தாவரவியல் விஞ்ஞானி சஞ்சய ராஜாராமுக்கு 2014-ம் ஆண்டுக்கான உலக உணவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உலக கோதுமை உற்பத்தியை பசுமைப் புரட்சி மூலம் 20 கோடி டன் உயர்த்தியமைக்காக இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருதுக்கான பரிசுத் தொகை 2.5 லட்சம் அமெரிக்க டாலர்களாகும் (சுமார் ரூ.1.5 கோடி). ராஜாராம், குளிர்காலம் மற்றும் கோடைகாலத்துக்கு ஏற்ற ஒட்டுவகை கோதுமை ரகங்களைக் கண்டுபிடித்தார். இவ்வகைக் கோதுமை அதிக அளவு மகசூல் கொடுக்கக்கூடியவை.

மொத்தம் 480-க்கும் மேற்பட்ட அதிக மகசூல் தரும் கோதுமை ரகங்களை ராஜாராம் கண்டறிந்தார். இந்த கோதுமை ரகங்கள் 51 நாடுகளில் சிறு மற்றும் பெரு விவசாயிகளால் பெரிதும் விரும்பி பயிர் செய்யப்படுகின்றன.

விருது குறித்த அறிவிப்பை வெளியிட்டு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறுகையில், “ராஜா ராமின் சேவை, நாம் இன்னும் பணி செய்ய வேண்டும் என அனைவரையும் தூண்டுவதாக இருக்கிறது. அடுத்த 30 ஆண்டு களுக்கு 200 கோடிக்கும் அதிக மான மக்களுக்கான தேவை யைப் பூர்த்தி செய்வது சிரமம்.

இது இரண்டாவது பசுமைப் புரட்சிக்கான நேரமாகும். ராஜாராம் கண்டறிந்த நூற்றுக் கணக்கான கோதுமை ரகங்களுக்காக நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறோம். அவர் கண்டுபிடித்த கோதுமை ரகங்கள் ஆண்டுக்கு 20 கோடி டன் உற்பத்தியை அதிகரித்து, உலகம் முழுவதும் லட்சக் கணக்கானவர்களின் உணவுத் தேவையை நிறைவு செய்துள்ளது” என்றார்.

பசுமைப் புரட்சியின் தந்தை என கூறப்படும் நார்மன் இ போர்லாக், சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையத்தின் (சிஐஎம்எம்ஒய்டி) கோதுமைத் திட்டத்தை 1976-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை வழிநடத்தி வந்தார். அவருக்குப் பிறகு அத்திட்டத்தின் இயக்குநர் பொறுப்பை ராஜாராம் ஏற்றார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த ராஜாராம், ஆஸ்திரேலியா வின் சிட்னி பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். தற்போது மெக்ஸிகோவில் வசித்து வருகிறார்.

-பிடிஐ

சஞ்சய ராஜாராம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in