Published : 12 Mar 2022 09:53 PM
Last Updated : 12 Mar 2022 09:53 PM

17 நாட்களில் 1,300 ராணுவ வீரர்கள் பலி - தீவிரமடையும் போர் குறித்து உக்ரைன் அதிபர்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு தொடங்கி 17 நாட்களை தொட்டுள்ள நிலையில், இதுவரை 1300 உக்ரைன் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து 17 நாட்களாக நடந்து வரும் தாக்குதலால் தலைநகர் கீவ் நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. வழியில் உள்ள நகரங்களை எல்லாம் தன்வசப்படுத்தியும் வருகிறது. மெலிடோபோல் என்ற நகரைக் கைப்பற்றிய ரஷ்யா அந்நகரின் மேயர் இவா ஃபெடரோவை கடத்திச் சென்றது. ரஷ்யப் படைகளின் நெருக்கடிக்கு இணங்க மறுத்ததால் அவரை படையினர் கடத்திச் சென்றதாக உக்ரைன் நாடாளுமன்றத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் கீவ், கார்கிவ், தெற்கு துறைமுக நகரமான மரியுபோல் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. தற்போது அங்கு தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது ரஷ்யா. மரியுபோலில் நகரில் துருக்கிய குடிமக்கள் உள்ளிட் 80-க்கும் அதிகமான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த மசூதி ஒன்றின் மீது ரஷ்ய படையினர் குண்டு வீசித்தாக்கியுள்ளதாக உக்ரைன் அரசின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் யாராவது கொல்லப்பட்டார்களா, எத்தனை பேர் காமடைந்தார்கள் என்ற விவரம் உடனடியாக வெளியிடப்படவில்லை.

1,300 உக்ரைன் துருப்புக்கள் கொலை: தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கீவ் நகரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ரஷ்ய தாக்குதலால் இந்த 17 நாட்களில் சுமார் 1,300 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்" என்றார். அதே வேளையில் நேற்று மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பலவற்றில் இதே 17 நாட்களில் சுமார் 6,000 ரஷ்ய துருப்புக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, இதே செய்தியாளர் சந்திப்பில் ஜெலென்ஸ்கி, "சுமார் 500-600 ரஷ்ய துருப்புக்கள் நேற்று உக்ரைன் படைகளிடம் சரணடைந்தனர்" என்றார்.

மெலிடோபோல் என்ற நகரைக் கைப்பற்றிய ரஷ்யா அந்நகரின் மேயர் இவா ஃபெடரோவை கடத்திச் சென்றது. இதுதொடர்பாக பேசிய ஜெலென்ஸ்கி, "ஏற்கனவே ரஷ்ய படை ஒரு மேயரை கொன்றுள்ளது. இப்போது இவரை கடத்திச் சென்றுள்ளார்கள். ரஷ்யப் படைகள் எந்த நகரங்களுக்குள் நுழைந்தாலும் சரி, அந்த நகரத்தின் அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்கள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். இது பயங்கரவாதம். மெலிடோபோல் மேயர் இவா ஃபெடரோ கடத்தப்பட்டதற்கு ரஷ்யா வெட்கப்பட வேண்டும். இது ஜனநாயகத்திற்கு எதிரான குற்றம்" என்று கடுமையாக விமர்சித்தார்.

அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை: ரஷ்ய துணை வெளியுறவு மந்திரி செர்ஜி ரியாப்கோவ், "உக்ரைனுக்கு மேற்கத்திய ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது" என்று தெரிவித்தார்.

இதனிடையே, செர்னோபில் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்ய அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்பான Rosatom அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செர்னோபில் மற்றும் சபோரிஜியா ஆலைகளின் கட்டுப்பாட்டில் உக்ரைன் பணியாளர்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

போரை முடிவுக்கு கொண்டுவர புதின் தயாராக இல்லை: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் சில மணிநேரங்கள் முன் ரஷ்ய அதிபர் புதினை தொடர்புகொண்டு பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின் போது போரை முடிவுக்கு கொண்டுவருமாறு இமானுவேல் மேக்ரோன் புதினிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால், போரை முடிவுக்கு கொண்டுவர புதின் தயாராக இல்லை என்று பிரான்ஸ் அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் பேச்சுவார்த்தையின் போது, போரில் மனித உரிமை மீறல்களுக்கு உக்ரேனிய வீரர்கள்தான் காரணம் என்று புதின் தெரிவித்ததாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x