

கிரேக்க தீவுகளில் ஒன்று இகேரியா. இங்கே நீண்ட ஆயுள் கொண்ட மக்கள் வசிக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிலேயே அங்குள்ள மனிதர்களின் ஆயுட் காலம்தான் அதிகமாக இருக்கிறது. அங்கே வசிக்கும் 3 பேர் 90 வயதைக் கடந்தவர்கள். மற்றவர்கள் நூறு வயதை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள். நீண்ட ஆயுள் மட்டுமல்ல, மிக ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். புற்றுநோய், மாரடைப்பு, மன அழுத்தம், டிமென்சியா போன்ற நோய்கள் மிக மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. கடந்த பல வருடங்களாக இகேரியா மக்களின் ஆரோக்கிய ரகசியத்தை அறிந்துகொள்ள பலரும் முயன்று வருகிறார்கள். ஆரோக்கியமான உணவு, மதியம் சிறிது தூக்கம், மகிழ்ச்சி ஆகியவைதான் அவர்களின் ஆரோக்கிய ரகசியம் என்று முடிவுக்கும் வந்திருக்கிறார்கள்.
மத்தியத் தரைக்கடலுக்கு கிழக்கே அமைந்திருக்கும் இகேரியா தீவில், அறிவியல் பரிசோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. டாக்டர் கிறிஸ்டினா, ‘‘இவர்கள் சாப்பிடும் காட்டு பீன்ஸில் சிவப்பு ஒயினில் இருப்பதை விட 10 மடங்கு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருக்கின்றன. உருளைக்கிழங்குகளையும் ஆட்டுப் பாலையும் அதிக அளவில் எடுத்துக்கொள்கிறார்கள். இறைச்சியை அதிகம் எடுத்துக்கொள்வதில்லை. அதேபோல வெள்ளைச் சர்க்கரையும் சேர்த்துக் கொள்வதில்லை. காபியைத் தவிர்த்து, மூலிகை தேநீரை அதிகம் பருகுகிறார்கள். இவர்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து குறைவான கலோரிகளே கிடைக்கின்றன. மதிய நேரத்தில் சிறிது நேரம் தூங்குவதால் மாரடைப்பு அபாயம் குறைவாகவே இருக்கிறது’’ என்கிறார்.
எழுத்தாளர் டான் பட்னர், ‘‘நான் பல ஆண்டுகள் இகேரியாவில் தங்கி, ஆய்வு செய்து ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறேன். அமெரிக்காவில் 79 வயது வரை வாழக்கூடிய ஒருவர், இகேரியாவில் 92 வயது வரை வாழ முடியும். நீண்ட ஆயுளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்கிறார்கள். இகேரியாவைச் சேர்ந்த கோஸ்டாஸ் ஸ்பான்சாஸ், அல்பேனிய போரில் தன் காலை இழந்தார். பிறகு இகேரியாவில் வசித்து வருகிறார். 2013-ம் ஆண்டு நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பழக்கவழக்கம், ஆரோக்கியமான உணவு என்று பல விஷயங்கள் இவர்களின் நீண்ட ஆயுளில் அடங்கியிருக்கின்றன’’ என்கிறார்.
இகேரியர்களைப் பின்பற்றினால் நீண்ட ஆயுள் வாழலாம்!
ஜெர்மனில் ‘பியர் யோகா’ அல்லது ‘போகா’ என்ற கலை இளைஞர்களிடம் பரவி வருகிறது. யோகாவை பியர் பாட்டிலுடன் செய்வதற்குப் பெயர்தான் போகா. பாட்டிலைத் தலை மீது வைத்துக்கொள்ளலாம், கைகளில் பிடித்துக்கொள்ளலாம், தேவையானால் குடிக்கவும் செய்யலாம். ஆனால் யோகா செய்துகொண்டே, இவற்றையும் செய்ய வேண்டும். இந்த போகாவை உருவாக்கியவர் ஜுலா. ‘‘பப்களில் இளைஞர்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க முயன்றேன்.
ஒருவரும் ஆர்வம் காட்டவில்லை. அவர்களுக்கு ஏற்றார்போல பியர் பாட்டில் யோகாவை உருவாக்கினேன். இப்போது பலரும் ஆர்வத்துடன் வருகிறார்கள்’’ என்கிறார் ஜுலா. ‘‘உடற்பயிற்சியின்போது ஆல்கஹால் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. தசைகள் கட்டுப்படாது. பொறுமை இருக்காது. ஆல்கஹாலில் இருந்து வெளிவர இதுபோன்ற பயிற்சிகள் உதவ வேண்டுமே தவிர, அவற்றை ஊக்குவிக்கக் கூடாது. உயிருக்கே ஆபத்து வரலாம்’’ என்று எச்சரிக்கிறார் மருத்துவர் இன்கோ ஃப்போபோயிஸ்.
புதுமை என்ற பெயரில் உயிருடன் விளையாடலாமா ஜுலா?