Published : 08 Mar 2022 04:07 PM
Last Updated : 08 Mar 2022 04:07 PM

உக்ரைனின் சுமி நகரில் சிக்கியிருந்த 694 இந்தியர்கள் பத்திரமாக வெளியேற்றம்: 4 நகரங்களில் தாக்குதலை நிறுத்தியது ரஷ்யா

கீவ்: உக்ரைனின் சுமி நகரில் சிக்கியிருந்த 694 இந்தியர்கள் பத்திரமாக வெளியேறினர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், உலக நாடுகள் பல, போப் பிரான்சிஸ் என பலதரப்பு கோரிக்கையையும் குறிப்பாக இந்தியர்களை மீட்க போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையையும் ஏற்று ரஷ்யா 4 நகரங்களில் மனிதாபிமான பாதைக்கான வழிவகை செய்துள்ளது.

இதனையடுத்து சுமி நகரில் சிக்கியிருந்த 694 இந்திய மாணவர்களும் பேருந்தில் எற்றப்பட்ட மத்திய உக்ரைனின் போல்டாவா எனும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரியும் உறுதி செய்துள்ளார். முன்னதாக நேற்று பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் இந்தியர்களை மீட்கும் வகையில் போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமி நகரம் உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து 350 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் இந்த நகரம் ரஷ்ய எல்லைக்கும் மிக அருகில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் 4 நகரங்களிலிருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருவதால் நாளைக்குள் உக்ரைனிலிருந்து அகதிகளாக வெளியேறுவோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடக்கும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

எந்தெந்த நகரங்கள்? மரியுபோல், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் ஆகியன ரஷ்யா போர் நிறுத்தத்தை அமல் செய்துள்ள நகரங்களாகும். இந்த 4 நகரங்களில் இருந்தும் ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர். ரஷ்ய நேரப்படி 1 மணிக்கு இந்த போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.
முன்னதாக இன்று ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் எண்ணெய் கிடங்கான ஜைட்டோமிர் சேதமடைந்தது. சுமி நகரில் ரஷ்யா குண்டு மழை பொழிந்ததில் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x