உக்ரைன் யுத்தக் களம் | ரஷ்ய ராணுவ வாகனங்களின் 'Z' குறியீட்டுக்கு அர்த்தம் என்ன?

உக்ரைன் யுத்தக் களம் | ரஷ்ய ராணுவ வாகனங்களின் 'Z' குறியீட்டுக்கு அர்த்தம் என்ன?
Updated on
2 min read

உக்ரைன் படையெடுப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரஷ்ய ராணுவ வாகனங்கள், போர் தளவாடங்களில் 'Z' என்ற எழுத்து இடம்பெறுள்ளது. இந்த எழுத்திற்கு என்ன அர்த்தம் என்ற வாதவிவாதங்கள் தற்போது எழுந்துள்ளன. ரஷ்ய தரப்பிலிருந்து இதற்கு நேரடியாக விளக்கம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் இந்த 'Z' குறையீடு பேசுபொருளாகியுள்ளது. ரஷ்யாவை ஆதரிக்கும் சிலரும் இந்தக் குறியீடு அடங்கிய டி ஷர்ட்டுகள் அணிந்து கொள்கின்றனர்.

'Z' குறியீட்டுக்கு என்ன அர்த்தம்? 'Z' என்பதை சிலர் வெற்றிக் குறியீடு எனக் கூறுகின்றனர். "Za pobedy" (வெற்றிக்காக) எனக் கூறுகின்றனர். இன்னும் சிலர் 'Z' என்பது "Zapad" (மேற்கு) என்பதைக் குறிக்கும் எனக் கூறுகின்றனர். இன்னும் சிலரோ, உக்ரைனுக்குள் போர் நடக்கும் சூழலில் சொந்த வாகனங்களை அடையாளம் காண ஏதுவாக 'Z' என்ற குறியீட்டை ராணுவ வாகங்களில் எழுதியுள்ளதாகக் கூறுகின்றனர். ரஷ்ய கொள்கையின், தேசப்பற்றின் புதிய அடையாளமாக 'Z' உருவெடுத்துள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ரஷ்ய மக்கள் சிலரும், தொழிலதிபர்கள் சிலரும் தங்களின் கார் உள்ளிட்ட வாகனங்களில் 'Z' என்ற குறியீட்டைப் பொருத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் ரஷ்ய சிந்தனையாளர்கள் குழு (RUSI) ரஸியின் பேராசிரியர் மைக்கேல் கிளார்க் ஸ்கை நியூஸுக்கு அளித்தப் பேட்டியில், போர்ப் பகுதிகளில் ரஷ்யப் படைகள் எங்கெங்கு இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள இந்த குறியீடு உதவும் என்று கூறினார்.

முதலில் இந்தக் குறியீடு காணப்பட்டது எப்போது? 'Z' குறியீடு முதன்முதலில் கடந்த பிப்ரவரி 22ல், டானெட்ஸ் பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய வாகனங்களில் தென்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், 2014ல் க்ரிமியாவை ரஷ்யா ஆக்கிரமித்தபோதே அங்கு சென்ற ரஷ்ய வாகனங்களில் 'Z' குறியீடு இருந்ததாக தி இன்டிபென்டண்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

உக்ரைன் போரில் இன்னும் சில குறியீடுகள்.. 'Z' குறியீடு ரஷ்ய வாகனங்கள் சிலவற்றில் முக்கோணமும் அதன் இருபகுதிகளிலும் இரண்டு கோடுகளும் இருக்கும் குறியீடும் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. ஒரு வட்டம் அதன் உள்ளே மூன்று புள்ளிகள் இருக்கும் குறியீடும், ஒரு பெரிய முக்கோணம், அதனுள் சிறிய முக்கோணமும் கொண்ட குறியீடும் சில ரஷ்ய வாகனங்களில் இடம்பெற்றுள்ளன.

சமூக வலைதளங்களில் இந்த 'Z' குறையீடு பேசுபொருளாகியுள்ளள நிலையில் ரஷ்ய ராணுவத் தரப்பில் இந்தக் குறியீடுகள் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in