Published : 08 Mar 2022 09:45 AM
Last Updated : 08 Mar 2022 09:45 AM

13-வது நாளாக தொடரும் ரஷ்ய தாக்குதல்: இன்றாவது சாத்தியப்படுமா மனிதாபிமான வழித்தடம்; மக்கள் தவிப்பு

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று 13வது நாளாக தொடர்கிறது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் எனப் பல நகரங்களிலும் சிக்கியுள்ள மக்கள் உயிர் பிழைக்கவாவது எங்காவது தப்பிவிட மாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

ஏற்கெனவே இரண்டு முறை அறிவிக்கப்பட்ட ரஷ்ய போர் நிறுத்த அறிவிப்பு செயல்பாட்டுக்கே வராத நிலையில், 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் மனிதாபிமான வழித்தடங்கள் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகிறது.

இதனால், ரஷ்ய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. கீவ், செர்னிங்கோவ், சுமி, மரியுபோல் மக்கள் இதனால் பயனடைவர் எனத் தெரிகிறது.

முன்னதாக, உக்ரைனில் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ரஷ்யாவுக்கோ, ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைனுக்கோ அனுப்பலாம் என்ற யோசனையை உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

புதின் ஜெலன்ஸ்கி நேரடி சந்திப்பு: 3 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேரடியாக சந்திப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளவிருப்பதாக வெளியுறவு அமைச்சர் குலேபா தெரிவித்தார். இது குறித்து அவர் தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், வியாழக்கிழமை துருக்கியில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவை சந்திக்கிறேன். அந்த சந்திப்பில் ரஷ்ய, உக்ரைன் அதிபர்கள் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளேன். அவர்கள் இருவரும் நேரடியாக பேச வேண்டும். ஏனெனில் இறுதி முடிவு அவர்கள் கைகளில் தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ராணுவ ஜெனரல் பலி: உக்ரைனுக்கு எதிரான போரில் 2வது ரஷ்ய ராணுவ ஜெனரல் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. கார்கிவ் நகருக்கு அருகே ரஷ்ய ராணுவ ஜெனரலை வீழ்த்தியாக உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர், மேஜர் ஜெனரல் விடாலி கெராசிமோவ் என்றும். அவர் ரஷ்யாவின் 41வது ராணுவப் பிரிவின் முதல் துணை கமாண்டர் என்பதும் தெரியவந்துள்ளது.

ஐ.நா. வலியுறுத்தல்: இதற்கிடையில் உக்ரைன் மக்கள் தாங்கள் விரும்பும் வழிகளில் விரும்பும் நாடுகளுக்குச் செல்லும் வகையில் ரஷ்யா மனிதாபிமான வழித்தடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் மிகப் பெரிய அளவில் மக்கள் அகதிகளாக தஞ்சம் புகும் சூழல் உருவாகியுள்ளது என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இதுவரை உக்ரைனிலிருந்து 10.7 லட்சம் பேர் உயிர்பிழைக்க அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதுவரை உக்ரைனிலிருந்து போலந்து, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, மால்டோவா, பெலாரஸ் ஆகிய நாடுகளில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் மக்கள் பாதுகாப்பாக வெளியேறவிடாமல் ரஷ்யா தடுப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உலக வங்கி நிதி உதவி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு 723 மில்லியன் டாலர் நிதியுதவி அறிவித்துள்ளது. இதில் 350 மில்லியன் டாலர் கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பிரிட்டன், டென்மார்க், லாட்வியா, லிதுவேனியா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளும் உக்ரைனுக்கு நிதி உதவிகளை அறிவித்துள்ளன. ஜப்பான் அரசும் 100 மில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x