Published : 07 Mar 2022 06:55 PM
Last Updated : 07 Mar 2022 06:55 PM

உக்ரைனில் சுமி உள்ளிட்ட 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு

கீவ்: உக்ரைனின் மரியுபோல் நகரில் நேற்று முன்தினம் தற்காலிக போர் நிறுத்தம் அறிவித்திருந்த ரஷ்யா இன்று (மார்ச் 07) சுமி உள்ளிட்ட 4 நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையிலான இந்த நடவடிக்கை, மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற வழிவகுக்கிறது.

உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கியது. முதலில் எல்லைப் பகுதிகளைத் தாக்கிய ரஷ்ய ராணுவம், அடுத்தாக துறைமுகம் மற்றும் விமான நிலையங்களைத் தாக்கிதுய. இதனைத் தொடர்ந்து உக்ரைனும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. பின்னர் ரஷ்ய ராணுவம் குடியிருப்பு பகுதிகளைத் தாக்க தொடங்கியிருப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், உக்ரைனில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றிட அந்தந்த நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்தியா அரசு "ஆப்ரேஷன் கங்கா" என்ற பெயரில் உக்ரைனில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டு மாணவர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. உக்ரைனின் கிழக்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் தீவிர தாக்குதல் நடைபெற்று வருவதால் போர் பகுதிகளில் இருக்கும் வெளிநாட்டினர் எல்லைப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

கார்கிவ் , கீவ் பகுதிகளில் தங்கியிருந்த இந்திய மாணவர்கள் பேருந்து மூலம் போலந்து போன்ற எல்லை நாடுகளுக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து தாய்நாடு அழைத்து வரப்பட்டனர். தீவிரமாக போர் நடைபெறும் பகுதியில் போக்குவரத்திற்கான வசதிகள் இல்லாததால் அங்கு சிக்கியிருப்பவர்களை மீட்பதில் சிக்கல் தொடருவதாக இந்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சுமி பகுதியில் 700-க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் உணவு மற்றும் குடிநீர் இன்றி போர் பகுதியில் சிக்கிப்பதாகவும் அவர்கள் பத்திரமாக வெளியேற உக்ரைன் மற்றும் ரஷ்யா போர்நிறுத்ததில் ஈடுபடவேண்டும் என இந்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்தச் சூழ்நிலைக்கு இடையே, தாக்குதல் தீவிரமாக உள்ள உக்ரைனின் கிழக்கு நகரமான சுமி, கார்கிவ், கீவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்யா இன்று தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அங்கிருந்து மக்கள் வெளியே மனிதாபின தாழ்வாரங்களையும் அமைத்துள்ளது.

அதேநேரத்தில், ’போர் நிறுத்தம் என்பதே கண்துடைப்பு. தற்காலிகமாக போரை நிறுத்துவதாக அறிவித்துவிட்டு, ரஷ்யா குண்டு வீசித் தாக்குவதை தொடர்கிறது’ என்று உக்ரைன் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே, உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைப்பேசியில் இன்று உரையாடினார்.

ஏற்கெனவே போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளில் முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x