Published : 05 Mar 2022 10:18 AM
Last Updated : 05 Mar 2022 10:18 AM

ரஷ்ய ராணுவ நடவடிக்கையை தவறாக சித்தரித்தால் 15 ஆண்டுகள் சிறை: புதின் சட்டம்

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கையை தவறாக சித்தரித்தால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதாவுக்கு ரஷ்ய நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அதிபர் புதின் ஒப்புதலுடன் உடனடியாக சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று (மார்ச் 5) பத்தாவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், ரஷ்யா பொதுமக்கள் உயிருக்கு குந்தகம் விளைவித்து போர்க் குற்றம் புரிந்துவருவதாக அந்நாட்டின் மீது உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. மேலும், ஊடகச் செய்திகளிலும் ரஷ்ய தாக்குதலால் பெரும் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் நேற்று, வரைவு மசோதா ஒன்றின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. போலிச் செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கைகளை அமல்படுத்தும் மசோதா அது. அந்த மசோதா அடுத்தடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவெற்றப்பட்டு பின்னர் அதிபர் புதினின் ஒப்புதலையும் பெற்றது.

நாடாளுமன்ற கீழவையில் சபாநாயகர் வொலோடின், நாளை முதல் ரஷ்ய ராணுவ நடவடிக்கை குறித்து அவதூறு செய்திகளைப் பரப்புவோர் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

ரஷ்ய அரசு ஊடகங்கள் உக்ரைன் மீதான தாக்குதலை படையெடுப்பு, போர் என்றெல்லாம் குறிப்பிடாமல் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே குறிப்பிட்டு வருகின்றன. ஆனால் சர்வதே ஊடகங்கள் அனைத்தும் ரஷ்ய படையெடுப்பு (Russian Invasion) என்றே குறிப்பிட்டு வருகின்றன.
இந்த புதிய சட்டத்தின்படி ரஷ்ய நடவடிக்கை குறித்து போலி செய்திகள் வெளியிட்டால் 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, கடுமையான அபராதங்களை சந்திக்கக் கூடும். இந்தச் சட்டத்தின் நோக்கம் ரஷ்ய வீரர்களை, ரஷ்ய ராணுவ அதிகாரிகளைப் பாதுகாப்பது. உண்மையைப் பாதுகாப்பது என்று ரஷ்ய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. இது தனிநபர், செய்தி ஊடகங்கள் என அனைவருக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

செய்தி வெளியிடப்போவதில்லை... ரஷ்ய ஊடகங்கள் இதனை மிகக் கடுமையான கருத்துச் சுதந்திர விலங்காகப் பார்க்கின்றன. இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதும் ரஷ்யாவின் நோவயா கஸட்டா செய்தித்தாளின் எடிட்டர் டிமிட்ரி முரடோவ் (கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர்களில் ஒருவர்), தங்கள் செய்தித்தாளில் இனி உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை பற்றிய செய்திகள் வராது என்று அறிவித்தார். சென்சார் விதிகள் கடுமையாக இருப்பதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும் தங்கள் ஊடக இணையதளத்திலிருந்தும் ரஷ்ய நடவடிக்கை தொடர்பான அனைத்து செய்திகளும் நீக்கப்படுகிறது என்றார். ஆனால், ரஷ்யா எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றி மட்டும் செய்திகள் வெளியிடப்படும் என்றார்.

பிபிசி செய்தி நிறுவனம் ரஷ்யாவில் இயங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு வெளியிலிருந்து ரஷ்ய செய்திகளை வழங்குவோம் எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம். கடமையைச் செய்வதற்காக அவர்கள் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்று பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டாவி தெரிவித்துள்ளார்.

நாக் (Znak) என்ற ரஷ்ய இணையதளம் தாங்கள் தங்கள் சேவையை இப்போதைக்கு நிறுத்துவதாகக் கூறியுள்ளது. ரஷ்யாவில் ஊடகப் பணி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

இதுதவிர வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா, ரேடியோ ஃப்ரீ யூரோப், ரேடியோ லிபர்டி, டட்ஷே வெல், மெடூசா ஆகிய ஊடகங்கள் தங்கள் நாட்டில் இயங்க ரஷ்யா தடை விதித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x