

மதத்தை இழிவுபடுத்தும் கருத்துடைய நிகழ்ச்சிகளை ஒளி பரப்பியதாகவும், நீதித்துறையை கேலி செய்ததாகவும் குற்றம்சாட்டி 2 தனியார் தொலைக்காட்சி சேனல்களுக்கு பாகிஸ்தான் அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. மேலும் அந்த சேனல்களுக்கு ரூ.1 கோடி அபராதமும் விதித்துள்ளது.
பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் (பிஇஎம்ஆர்ஏ), ஜியோ டிவி குழுமத்தின் என்டர்டெயின்மென்ட் சேனலுக்கான உரிமத்தை 30 நாட்களுக்கும், ஏஆர்ஒய் நியூஸ் சேனலுக்கான உரிமத்தை 15 நாட்களுக்கும் ரத்து செய்துள்ளது. இந்த 2 சேனல்கள் ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள் பிஇஎம்ஆர்ஏ சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் இருந்ததாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சர்ச்சைக்குரிய நடிகை வீணா மாலிக்கின் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒருபகுதியாக நடைபெற்ற போலி திருமணத்தின்போது, மத ரீதியான பாடல் ஒளிபரப்பானது. இது தொலைக்காட்சி ரசிகர்களின் மத உணர்வுகளை அவமதிப்பு செய்யும் வகையில் இருந்ததாகக் கூறி ஜியோ என்டர்டெயின்மென்ட் சேனலுக்கு தடை விதிக்கப்பட்டது.
நீதித்துறைக்கு எதிரான நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்காக, ஏஆர்ஒய் நியூஸ் சேனலின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளர் முபாஷிர் லுக்மேன் மற்றும் அவரது 'காரா சச்' நிகழ்ச்சிக்கும் பிஇஎம்ஆர்ஏ தடை விதித்துள்ளது.
இவ்விரு சேனல்களுக்கும் ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப்போவதாக ஏஆர்ஒய் நியூஸ் சேனல் தெரிவித்துள்ளது.
அரசு அமைப்புகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளின் நெருக்குதல் காரணமாக பாகிஸ் தானில் ஊடகங்கள் பல்வேறு பிரச்சி னைகளை எதிர்கொண்டு வருகின்றன.