Published : 04 Mar 2022 05:50 PM
Last Updated : 04 Mar 2022 05:50 PM

"ரஷ்யாவின் பொறுப்பற்ற செயல்" - உக்ரைன் அணுமின் நிலையத் தாக்குதலுக்கு நேட்டோ, ஜெர்மனி கண்டிப்பு

புருஸல்ஸ்: உக்ரைன் மீது ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலால் போர்ப் பதற்றம் உச்சமடைந்துள்ளது. ரஷ்யாவின் இந்தத் தாக்குதலுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் குறித்து நேட்டோ தலைவர் ஜென் ஸ்டோலன்பெர்க் கூறுகையில், "உக்ரைன் அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பது ரஷ்யாவின் பொறுப்பற்ற செயலைக் காட்டுகிறது. ரஷ்யா தனது அண்டை நாட்டுக்கு எதிரான போரை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

மேற்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு முன்பாக இதனைத் தெரிவித்த அவர், "ஒரே இரவில் உக்ரைனின் அணுமின் நிலையம் தாக்கப்பட்ட செய்தியை நாம் பார்த்தோம். இது ரஷ்யாவின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. அத்துடன் ரஷ்யா தனது அனைத்து துருப்புகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டு நன்மைக்கான வழிகளைக் கையாள வேண்டும்" என்று கூறினார்.

இந்தத் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெர்மனி பிரதமர் ஒலன் ஷோலாஸ்கி, ”அணுமின் நிலைய வளாகத்தின் மீது இரவில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலான்ஸ்கி சுருக்குமாக தெரிவித்தார். தீவிரமான பின்விளைவுகளைப் பற்றி கருத்தில் கொள்ளாமல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.நல்லவேளையாக தீ, அலுவலக வளாகத்துடன் கட்டுப்படுத்தப்பட்டது” என்றார்.

இதனிடையே, ரஷ்யா மீது கடுமையாக குற்றம்சாட்டியுள்ள உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி, "செர்னோபில் கொடூரத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்டவே ரஷ்யா விரும்புகிறது” என்று கூறினார்.

முன்னதாக, "ரஷ்ய படைகள் நேற்றிரவு நடத்திய தாக்குதலால் அணுமின் நிலையத்தில் எந்த அணுக்கசிவும் ஏற்படவில்லை” என ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ”உக்ரைனில் தாக்குதல் நடந்த பின்னர், அவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். தீ அங்கு அணைக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு பேர் காயமைடைந்துள்ளனர். அங்கு நிலைமை சவாலாகவும் பதற்றமாகவும் தொடர்கிறது. அங்கு ஒரே ஒரு அணு உலை மட்டும் 60 சதவீதத்துடன் இயங்குகிறது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x