Published : 04 Mar 2022 04:14 PM
Last Updated : 04 Mar 2022 04:14 PM

பெஷாவர் மசூதியில் தொழுகையின்போது குண்டுவெடிப்பு:  30 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் தொழுகையின்போது நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 30 பேர் உடல்சிதறி பலியாகினர்.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியில் இருக்கும் பெஷாவர் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் மசூதி ஒன்று உள்ளது. அங்கு இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு பேர் மசூதிக்குள் நுழைய முயன்றனர். அவர்கள் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து அங்கு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் 30 பேர் உடல் சிதறி பலியாகினர். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. குண்டு வெடிப்பை தொடர்ந்து பெஷாவர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்குமாறு பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x