Published : 03 Mar 2022 05:11 PM
Last Updated : 03 Mar 2022 05:11 PM

எங்களிடம் இழக்க ஒன்றுமில்லை. ஆனால்... - உக்ரைன் அதிபரின் ஆவேசமும், ரஷ்யா தந்த அப்டேட்டும்

கீவ்: "உக்ரைனின் ஒவ்வொரு நகரையும், ஒவ்வொரு தெருவையும்... ஏன் ஒவ்வொரு வீட்டையும் கூட மீட்டமைப்போம்" என்று ரஷ்யாவுக்கு உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸிகி சவால் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 8-வது நாளாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. துறைமுக நகரான கெர்னாஸ்கைக் கைப்பற்றியது. கார்கிவ் பெரும்பாலும் ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட வீடியோவில், "எங்கள் நாட்டின் மீது படையெடுத்ததற்கான விலையை ரஷ்யா நிச்சயம் கொடுக்கும். இழப்பீடு என்றொரு வார்த்தைக் உள்ளது. அதை இப்போதே உச்சரித்துப் பழகுங்கள். எங்களுக்கு நீங்கள் செய்த கொடுமைகள் அனைத்திற்கும் நீங்களே இழப்பீடு தருவீர்கள். ஒவ்வொரு உக்ரேனியருக்கும் நீங்கள் உதவி செய்ய வேண்டியது வரும்.

இப்போதைக்கு நாங்கள் இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தைத் தவிர வேறு ஏதுமில்லை. ஆனால், நாங்கள் இங்குள்ள ஒவ்வொரு நகரையும், ஒவ்வொரு தெருவையும் ஏன் ஒவ்வொரு வீட்டையும் கூட மீட்டமைப்போம்.

உக்ரைனுக்கு ஐரோப்பிய நட்பு நாடுகளிடமிருந்து அன்றாட போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன" என்று கூறியுள்ளார்.

உக்ரைன் நகரங்களை ரஷ்யா ராக்கெட்டுகள், ஏவுகணைகள் மூலம் தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில்தான் உக்ரைன் அதிபரின் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

கீவ் நகரின் நிலவரம் குறித்து அதன் மேயர் விடாலி கிட்ஸ்ச்கோ, " சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியிருக்கலாம், ஆனால் நேற்றிரவு கேட்ட வெடிப்புச் சத்தம் எல்லாம் ரஷ்ய ஏவுகணைகளை, விமானங்களை உக்ரைன் ராணுவம் வீழ்த்தியதன் அடையாளம். கீவில் நிலைமை கடினமாக இருந்தாலும் கட்டுக்குள்தான் இருக்கின்றது" என்று கூறியுள்ளார்.

ரஷ்யா குற்றச்சாட்டு... - இதற்கிடையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெட் லாவ்ரோவ், ”அணு ஆயுதப் போர் பற்றிய எண்ணம் மேற்கத்திய நாடுகளுடைய தலைவர்களின் புத்தியில்தான் எப்போதும் பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கின்றனவே தவிர, ரஷ்யர்களின் மனங்களில் அல்ல” என்று கூறியுள்ளார்.

கெர்சான் நகரைத் தொடர்ந்து மற்றொரு துறைமுக நகரான மரியுபோலையும் ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன. இருப்பினும் கீவ், கார்கிவ், மரியுபோலில் இருந்து உக்ரேனியர்கள் பாதுகாப்பாக வெளியேற 'மனிதாபிமான வழித்தடங்களை' ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x