Published : 28 Feb 2022 06:11 AM
Last Updated : 28 Feb 2022 06:11 AM

சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக புகார் மனு - அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புதல்: தங்கள் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க பல்வேறு நாடுகள் தடை

உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதியில் ரஷ்ய போர் விமானங்கள் குண்டுகளை வீசி வருகிறது. ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதன்காரணமாக அந்தப் பகுதி கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.படம்: பிடிஐ

கீவ்

போர் தீவிரமடைந்துள்ள சூழலில் பெலாரஸின் கோமெல் நகரில் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டிருக்கிறது. இதனிடையே, சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் அரசு புகார் மனு அளித்துள்ளது.

கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.

உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரான கார்கிவ்வை கைப்பற்றி விட்டதாக ரஷ்ய ராணுவம் நேற்று காலை அறிவித்தது. இதை அந்த பிராந்திய ஆளுநர் அலியக் சினிகுபோவ் மறுத்துள்ளார். அவர் கூறும்போது ‘‘ஆரம்பத்தில் ரஷ்ய படைகள் முன்னேறியது உண்மைதான். அவர்களை உக்ரைன் வீரர்களும் பொதுமக்களும் விரட்டியடித்து பின்வாங்கச் செய்துள்ளனர். தற்போது கார்கிவ் நகரம் முழுமையாக உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வர உக்ரைன் தரப்பு மறுத்துவிட்டது. தற்போது அவர்களே பெலாரஸின் கோமெல் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர். இதை ரஷ்யா ஏற்றுக் கொண்டுள்ளது.

கோமெல் நகரில் உக்ரைன் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய குழு தயாராக உள்ளது.

இந்தக் குழுவுக்கு ரஷ்ய அதிபர் புதினின் பிரதிநிதி விளாடிமிர் மெடின்கி தலைமை ஏற்றுள்ளார். கடந்தமுறை பேச்சுவார்த்தைக்காக போரை தற்காலிகமாக நிறுத்தினோம். இந்த முறை போரை நிறுத்த மாட்டோம். தொடர்ந்து போர் நடைபெறும். பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இல்லை என்றால் அதற்கான விளைவுகளை அந்த நாடு சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டிருப்பதாக உக்ரைன் அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. எனினும் எந்த இடத்தில், எப்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.

ரஷ்யாவின் அணு ஆயுதங்களை கையாளும் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அந்தநாட்டு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதன்காரணமாகவே உக்ரைன் அரசு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டிருப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தெதர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் அரசு தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்கி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘ரஷ்யராணுவம் உக்ரைனை ஆக்கிரமித்து இனப் படுகொலையில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்ய ராணுவ நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். அடுத்த வாரம்மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

விமானங்களுக்கு தடை

ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், போலந்து உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றன. அத்துடன் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

இதைத் தொடர்ந்து போலந்து, செக் குடியரசு, பல்கேரியா, ருமேனியா, ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், பிரிட்டன், ஆஸ்திரியா, சுவீடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்களது வான்பரப்பில் பறக்க தடை விதித்துள்ளன.

போலந்து தூதர் ஆடம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள் விசா இன்றி போலந்து நாட்டுக்கு வரலாம். எல்லை கடந்து வரும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை போலந்தில் உள்ள இந்திய தூதரகம் வழங்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x