Published : 27 Feb 2022 09:57 PM
Last Updated : 27 Feb 2022 09:57 PM

'அணு ஆயுத தடுப்புக் குழுவை தயாராக வைத்திருங்கள்' - புதின் உத்தரவால் அதிர்ச்சியில் உலக நாடுகள்

மாஸ்கோ: மேற்கத்திய நாடுகள் நமக்கு எதிராக உள்ளன ஆகையால் அணு ஆயுத தடுப்புக் குழுவைத் தயாராக வைத்திருங்கள் என்று ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்றுதான் தனது படையெடுப்புக்குப் பெயர் வைத்து தாக்குதலைத் தொடங்கினார் ரஷ்ய அதிபர் புதின்.
அப்போதே சர்வதேச போர் ஆய்வாளர்கள், இது அதிபர் புதின் சொல்வது போல் கிழக்கு உக்ரைனின் டானெட்ஸ்க், லுஹான்ஸ்க்கை சுதந்திர நாடாக அறிவித்ததோடு நிற்காது. கிழக்கு உக்ரைனில் புதின் ஆதரவு பிரிவினைவாதிகள் பிடியில் இருக்கும் டான்பாஸைத் தாண்டியும் நகரும் என்றனர்.

அது 4 நாட்களில் நினைத்துப் பார்க்க முடியாது வேகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனை வான்வழி, தரைவழி என அனைத்து மார்க்கத்திலும் தாக்கிக் கொண்டிருக்கிறது ரஷ்யா. ஓர் உக்கிரமான போரில் நிகழ்த்தப்படுவதைப் போலவே ஒரு நாட்டின் ராணுவத் தளங்களை அழிப்பது, விமானத் தளங்களை அழிப்பது, துறைமுகங்களைக் கைப்பற்றுவது, எண்ணெய் கிடங்குகளை அழிப்பது, எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்துவது, பொதுமக்களையும் குறிவைத்து தாக்குவது என எல்லாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது ரஷ்யா. மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை சரமாரியாக விதித்துள்ளன. மேலும் இத்தாலி, போலந்து உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா தங்களின் வான்வழியைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. ரஷ்ய அதிபர் புதின், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோரின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் அனுமதியளித்துள்ளது. இப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனியின் வரலாறு காணாத நகர்வு: எல்லாவற்றிற்கும் மேலாக ஒருபடி அதிகமாகச் சென்று ஜெர்மனி அரசு இத்தனை ஆண்டு காலமாக இல்லாமல் முதன்முறையாக பாதுகாப்பு, வெளியுறவு கொள்கைகளை மாற்றி திருத்தியுள்ளது. போர் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஆயுத உதவிகள் செய்வதில்லை என்ற தனது கோட்பாட்டில் இருந்து விலகி, சட்டத்தைத் திருத்தி உக்ரைனுக்கு 1000 டாங்கர் எதிர்ப்பு ஆயுதங்கள், 500 ஸ்டிங்கர் ரக சர்ஃபேஸ் டூ ஏர் ஏவுகணை ஆகியனவற்றை அளிக்க முன்வந்துள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் ஆவேசமடைந்துள்ள ரஷ்ய அதிபர் புதின், அணு ஆயுத தடுப்புப் படைகளை தயார் நிலையில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

புதினின் அதிரவைக்கும் உத்தரவு: ஞாயிறு மாலை தொலைக்காட்சியில் பேசிய அதிபர் புதின், "மேற்கத்திய நாடுகள் நம்மை விரோதிகளாகக் கருதுகின்றன. பொருளாதார ரீதியாக நிறைய தடைகள் நம் மீது விதிக்கப்பட்டுள்ளன. இவை சட்டவிரோதமானவை. நேட்டோ நாடுகளும் நம் நாட்டுக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பரப்பி வருகின்றன. அதனால், பாதுகாப்பு அமைச்சர் அணு ஆயுத தடுப்புப் படைகளை தயார் நிலையில் வைக்குமாறு நான் உத்தரவிடுகிறேன்" என்று கூறினார்.

இதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அழுத்தமாக சரி என்றார். இந்த உத்தரவும், இசைவும் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளைக் கடத்தியுள்ளது.

உலகிலேயே ரஷ்யாவிடம் இரண்டாவது பெரிய அணு ஆயுத பலம் உள்ளது.

அமெரிக்கா கண்டனம்: ரஷ்யாவின் இந்த அறிவிப்பு உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் க்ரீன்ஃபீல்டு, ”இந்த உத்தரவு அதிபர் புதின் போரை தீவிரப்படுத்த முயற்சிப்பதையே உணர்த்துகிறது. இந்தச் சூழலில் புதின் நடவடிக்கைகளை மிகவும் வலுவான வழிகளில் தடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார்! இந்நிலையில், உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் எனக் கூறியுள்ளார். உக்ரைன் பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தைக்காக தனது அதிகாரிகள் குழுவை அனுப்பிவைப்பதாக அவர் கூறியுள்ளார். ராணுவத் தாக்குதலை அறிவித்துள்ள 4வது நாளே, ரஷ்யா அணு ஆயுத தாக்குதலுக்கு ஆயத்தமாவதால் ஜெலன்ஸ்கி நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குப் பணிந்து வந்துள்ளதாக போர்க்கள் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் உலகின் மிகப்பெரிய கார்கோ விமானமான சிறப்புமிகு An-225 Mriya சரக்கு விமானத்தை ரஷ்ய படை தாக்குதலில் தகர்த்துள்ளது. இதனை உக்ரைனின் ராணுவ தளவாட தயாரிப்பு அமைப்பான உக்ரோபோரோன்ப்ரோம் உறுதிப்படுத்தியுள்ளது.

உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரியோ குலேபா, சிறப்புமிகு An-225 Mriya சரக்கு விமானத்தை ரஷ்ய படைகள் தகர்த்துள்ளன. ஆனால், அவர்களால் எங்களில் சுதந்திரமான, ஜனநாயக ஐரோப்பிய நாடு என்ற வலுவான கனவை சிதைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x